ADDED : டிச 26, 2024 06:51 AM

மைசூரு: ''ரயில்வே துறையில் பணியாற்ற, கன்னடர்கள் விரும்புவதில்லை,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
மைசூரில் மாநில விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'தேசிய விவசாயிகள் தின'த்தில் மத்திய அமைச்சர் சோமண்ணா பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
ரயில்வே துறையில் 12 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், தென் மாநிலங்களில் உள்ள ரயில்வே பணியில், 99 சதவீதம் பேர் வட மாநிலத்தவர்களே பணியாற்றுகின்றனர்.
எனவே, ரயில்வே தேர்வுகளை கன்னடத்தில் எழுத வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். ஆனால், ரயில்வே பணியில் கன்னடர்கள் பலருக்கு விருப்பமே இல்லை. 'உங்கள் துறையில் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். எனவே, எங்களுக்கு இப்பணி வேண்டாம்' என்கின்றனர்.
நான் மத்திய அமைச்சர் ஆனதற்கு பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் தான் காரணம். என் பதவி காலத்தில், கன்னடர்கள் சிலர், இத்துறையில் இணைந்தது எனக்கு கவுரவம் அளிக்கிறது.
எனவே, விவசாயிகளின் மகன்கள், ரயில்வே துறையில் பணி செய்ய ஆர்வம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

