பெங்களூரில் கன்னடர் - தமிழர் ஒற்றுமை, கலாசார மாநாடு கோலாகலம்
பெங்களூரில் கன்னடர் - தமிழர் ஒற்றுமை, கலாசார மாநாடு கோலாகலம்
ADDED : அக் 21, 2024 12:27 AM

பெங்களூரு : அரசியல் கட்சி தலைவர்கள், மாநிலத்தின் வெவ்வேறு தமிழ் அமைப்பினர் கூட்டம், கூட்டமாக பங்கேற்பு, மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழா, தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிபடுத்தும் கண்காட்சி என கன்னடர் - தமிழர் ஒற்றுமை, கலாசார கோலாகலமாக நடந்தது.
கர்நாடக தாய்மொழி கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் தலைமையில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று கன்னடர் - தமிழர் ஒற்றுமை, கலாசார மாநாடு நடந்தது.
பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, விராஜ்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ., பொன்னண்ணா, ஜெயநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றி, மாநாட்டை துவக்கி வைத்தனர். ஷிவமொக்கா தமிழ் தாய் சங்க தலைவர் சம்பத் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழர்கள் மீது அன்பு
மாநாட்டில் எடியூரப்பா பேசியதாவது:
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் நாட்டின் சிறப்பு. இந்தியாவில் ஒவ்வொரு 300 கி.மீ., துாரத்துக்கும், ஒவ்வொரு மொழி பேசுபவர்கள் உள்ளனர். தென் மாநிலங்களில் இது அதிகம்.
நான் முதல்வராக இருந்த போது, மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினேன். பெங்களூரில் உலக புலவர் திருவள்ளுவர் சிலை, சென்னையில் கன்னட புலவர் சர்வக்ஞர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இது மொழி நல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக விளங்கியது; இந்திய அளவில் பேசப்பட்டது.
கர்நாடகாவில் கன்னடர்கள் - தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். நான், முதல்வராக இருந்த போது, தமிழர்கள் நலனுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து கொடுத்தேன். தமிழர்கள், கர்நாடக வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உதவுகின்றனர்.
எனக்கு வேறு முக்கியமான நிகழ்ச்சி இருந்தது. தமிழர்கள் மீது நான் வைத்துள்ள அன்பின் காரணமாக, நேராக இம்மாநாட்டுக்கு வந்தேன். அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் தேசிய மொழி
கர்நாடக ரக் ஷனா வேதிகே தலைவர் நாராயணகவுடா பேசியதாவது:
மாநாட்டில் பங்கேற்றோருக்கு கர்நாடகாவின் 7.50 கோடி மக்கள் சார்பில் வாழ்த்துகள். இத்கைய மாநாடு பல ஆண்டுகளுக்கு முன்னரே நடந்திருந்தால், கன்னடர்கள் - தமிழரிடையே பிரச்னை ஏற்பட்டிருக்காது. நாம் பேசும் மொழி தான் வேறு, ஆனால் அனைவரும் இந்தியர்களே.
ஆரம்ப கட்டத்தில், மொழி, காவிரி நீர், எல்லை விஷயத்தில் கருத்து வேறுபாடு நிலவியது. இது கர்நாடகா - தமிழகம் என இரு மாநில அரசுகளிடையே தான் இருந்தது. கன்னடர்கள் - தமிழர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. சில அரசியல் கட்சியினர், தங்கள் லாபத்துக்காக பிரச்னை செய்கின்றனர்.
கர்நாடகாவில் வாழும் தமிழர்கள், இந்த மண்ணின் உயர்வுக்கு உழைத்து வருகின்றனர். வீட்டில் தமிழில் பேசுங்கள்; வெளியில் வந்த பின், அந்த மண்ணின் மொழியை பேசுங்கள்.
வெறும் 650 ஆண்டுகள் பழமையான ஹிந்தி மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், 2,300 ஆண்டுகள் பழமையான தமிழ், கன்னட மொழிகளை ஏன் அறிவிக்க கூடாது.
எம்.ஜி.ஆர்., மாஸ்தி
அனைவரும் ஒன்றே என்று 12ம் நுாற்றாண்டில் பசவண்ணரும், 20ம் நுாற்றாண்டில் கவிஞர் குவெம்புவும் கூறியதை தான், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., கூறினார்.
நம்மில் வேற்றுமை இல்லை. வந்தாரை வாழ வைக்கும் மாநிலம் கர்நாடகா. கன்னட ராஜ்யோசத்சவா நாளான நவம்பர் 1ம் தேதி, அனைவரும் அவரவர் வீடுகளின் மீது கன்னட கொடியை ஏற்றி ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.
தமிழர்கள் பிறந்த மண் தமிழகமாக இருந்தாலும், கர்மபூமி கர்நாடகா என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விரைவில் தென் மாநில அரசியல் கட்சிகள், இலக்கியவாதிகளை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தப்படும்.
கர்நாடகாவில் வாழும் தமிழர்கள், கன்னடர்களே; தமிழகத்தில் வாழும் கன்னடர்கள், தமிழர்களே. அந்தந்த மண்ணிற்கு அனைவரும் மதிப்பு கொடுக்க வேண்டும்.
தமிழை தாய்மொழியாக கொண்ட மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், கன்னட மொழியில் ஞானபீட விருதை பெற்று கொடுத்தார். தமிழரான ராஜரத்தினம், வாயில் அலகு குத்தி கொண்டும், மூக்கில் கன்னடத்தில் பேசினார். இப்படி நீங்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநிலத்தின் வெவ்வேறு தமிழ் அமைப்பினர் கூட்டம், கூட்டமாக பங்கேற்ற்றனர். மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழா, தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிபடுத்தும் கண்காட்சி என கன்னடர் - தமிழர் ஒற்றுமை, கலாசார மாநாடு கோலாகலமாக நடந்து முடிந்தது.
...புல் அவுட்...
முதல்வருடன் ஆலோசனை
தமிழ் மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. கலை, கலாசாரம், பாரம்பரியமிக்கது. உலகின் அனைத்து துறைகளிலும் தமிழர்கள் உள்ளனர். அப்துல் கலாம், சி.வி.ராமன் உட்பட பல மகான்கள், தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் சித்தராமையா கன்னட மொழி மீது அதிக பற்று கொண்டவர்.
அதற்காக, மற்ற மொழிகளை வெறுத்ததில்லை; வெறுக்கவும் மாட்டார். பெங்களூரில் தமிழ் மொழி தெரிந்தால் வாழ்ந்து விடலாம். ஒரு வக்கீலாக சொல்கிறேன், காவிரி நதிநீர் விஷயத்தில், நம்மிடையே எந்த பிரச்னையும் இல்லை. தமிழர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கின்றோம். மாநாட்டு தீர்மானங்கள் செயல்படுத்துவது குறித்து, முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பொன்னண்ணா, எம்.எல்.ஏ., - காங்., விராஜ்பேட் (முதல்வரின் சட்ட ஆலோசகர்)
...புல் அவுட்...
அனைவரும் ஒன்றே
கர்நாடக மண்ணில், நாம் அனைவரும் ஒன்றே. சிவாஜிநகர் தொகுதியில், மத சிறுபான்மையினரும், மொழி சிறுபான்மையினரும் அதிக அளவில் வசிக்கின்றனர். கர்நாடகாவில் வாழ்பவர்கள் அனைவரும் கன்னடர்களே. தமிழ் மொழி மிகவும் பழமையானது. என் தொகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை பூங்காவை மேம்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 140 ஆண்டு பழமையான தமிழ் பள்ளி மேம்படுத்தப்படுகிறது. அனைவரையும் சரிசமமாக நடத்துகிறேன். நமது உரிமைகளை நிலை நாட்ட இத்தகைய மாநாடுகள் தேவை.
ரிஸ்வான் அர்ஷத், எம்.எல்.ஏ., - காங்., சிவாஜிநகர்.
...புல் அவுட்...
தமிழர்களுக்கு உதவி
மடிகேரியில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். கன்னடர்கள் - தமிழர்கள் காலம், காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். இத்தகைய மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி. தமிழர்களுக்கு வேண்டிய உதவிகள் தொடர்ந்து செய்யப்படும்.
மந்தர்கவுடா, எம்.எல்.ஏ., - காங்., மடிகேரி.
***