கர்நாடக சட்டசபையில் நள்ளிரவில் "அரை தூக்கத்துடன்" எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்
கர்நாடக சட்டசபையில் நள்ளிரவில் "அரை தூக்கத்துடன்" எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்
UPDATED : ஜூலை 25, 2024 09:11 AM
ADDED : ஜூலை 25, 2024 09:02 AM

பெங்களூரு; மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த மனைகள் ஒதுக்கீடு முறைகேடு குறித்து விவாதிக்க, சபாநாயகர் அனுமதி அளிக்காததை கண்டித்து, கர்நாடக சட்டசபை, மேல்சபையில் பா.ஜ., - ம.ஜ.த.,வினர் இரவிலும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தற்போது வரை இந்த போராட்டம் தொடர்கிறது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் எனும், 'மூடா' சார்பில், சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சட்டசபை, மேல்சபை ஆகிய இரண்டிலும் நேற்று மதியம் கேள்வி நேரத்துக்கு பின், பா.ஜ., - ம.ஜ.த.,வினர், 'மூடா' முறைகேடு குறித்து விவாதிக்க வாய்ப்பு தரும்படி கேட்டனர். இதற்கு ஆளுங்கட்சியான காங்., தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'ஏற்கனவே நீதி விசாரணை நடந்து வருவதால், விவாதிக்க கூடாது' என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'முறைகேட்டில் முதல்வர் சித்தராமையா பெயர் அடிபடுவதால், இது குறித்து விவாதித்தே ஆக வேண்டும்' என எதிர்க்கட்சியினர் அடம் பிடித்தனர். இரு சபைகளிலும் முதல்வரை கண்டித்தும், காங்கிரஸ் அரசை கண்டித்தும் பதாகைகள் ஏந்தி தர்ணா நடத்தினர்.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும்.,
சட்டசபை சபாநாயகர் காதர், மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆகியோர் எடுத்து கூறியும், எதிர்க்கட்சியினர் தர்ணாவை கை விடவில்லை. இதையடுத்து, சட்டசபை, மேல்சபை நேற்று நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டு, இன்று மீண்டும் கூடும் என அதன் தலைவர்கள் அறிவித்தனர். ஆயினும், 'அரசை கண்டித்து இரு அவைகளிலும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அறிவித்தார். இதன்படி, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும்; மேல்சபையில் எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி தலைமையில் எம்.எல்.சி.,க்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ம.ஜ.த.,வினரும் இதில் கலந்து கொண்டனர்.
சட்டசபை, மேல்சபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் வேளையில், முதல்வர் சித்தராமையா, நேற்று மாலை திடீரென கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து பேசினார். 20 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு, 'மூடா' முறைகேடு தொடர்பாக கவர்னருக்கு முதல்வர் தன்னிலை விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.