கோவிலில் முதல் மரியாதை தெய்வத்துக்கு தான்: ஐகோர்ட்
கோவிலில் முதல் மரியாதை தெய்வத்துக்கு தான்: ஐகோர்ட்
ADDED : டிச 29, 2025 09:01 PM

சென்னை: 'கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான் என்பதால், சிறப்பு மரியாதைகளை, ஒரு போதும் உரிமையாக கோர முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவராஜ சுவாமி கோவிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு, 1992 முதல் வழங்கப்பட்டு வந்த, 'பஞ்ச முத்திரை மரியாதை' நிறுத்தப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ஹிந்து அறநிலையத் துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''தேவராஜ சுவாமி கோவில் செயல் அறங்காவலரின், 1991ம் ஆண்டு செப்., 5ம் தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டபடி, காஞ்சி காமகோடி பீடம் -சங்கர மடம், அகோபில மடம், நாங்குநேரி வானமாமலை மடம், மைசூர் பரகால ஜீயர் மடம், உடுப்பி வியாசராயர் மடம் ஆகிய ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதைகள், பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை, ஒருபோதும் உரிமையாக கோர முடியாது. மடங்களின் தலைவர்களை கவுரவிப்பது, அவர்களுக்கு மரியாதை வழங்குவது குறித்து, அறநிலையத்துறை சட்டப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.இதுதொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரியை அணுகி, மனுதாரர் தரப்பு நிவாரணம் கோரலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

