கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை... நீக்க முடியாது! எதிர் கோஷ்டியினருக்கு மேலிடம் கண்டிப்பு
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை... நீக்க முடியாது! எதிர் கோஷ்டியினருக்கு மேலிடம் கண்டிப்பு
ADDED : டிச 09, 2024 08:35 AM

'கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை மாற்ற வேண்டும்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கோஷ்டியினரின் கோரிக்கையை ஏற்க, அக்கட்சியின் மேலிடம் மறுத்து விட்டது. மேலும், அவர்களை மேலிடம் கடுமையாக கண்டித்து உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பின், மாநில பா.ஜ., தலைவர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆகிய பதவிகளை பெறுவதற்கு பல தலைவர்கள் முயன்றனர். இதில், விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மிகவும் ஆர்வமாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.
கடும் விமர்சனம்
ஆனால், மாநில தலைவராக விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவராக அசோக் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த எத்னால், கட்சி மேலிடத் தலைவர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக, தன்னை கட்சிக்குள் அழைத்து வந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கடுமையாக எதிர்த்தார்.
சொந்த கட்சிக்காரர்களுக்கு எதிராக வசை பாட துவங்கினார். இதனால், விஜயேந்திரா ஆதரவாளர்கள் எத்னாலை எதிர்த்தனர்.
ஆனால், எத்னாலோ எதையும் கண்டுகொள்ளாமல், சொந்த கட்சி பற்றியே சட்டசபையில் விமர்சித்தார். இன்னும் ஒரு படி மேலே சென்று, காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு 1,000 கோடி ரூபாய் செலவிட பா.ஜ., தயாராக உள்ளது என்று குண்டை போட்டார். இது, பா.ஜ., தலைவர்களுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது.
காங்., கிண்டல்
எத்னாலுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், கட்சி மேலிடம் அவருக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்தது. இடைத்தேர்தல் பிரசாரம், வக்பு வாரியத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களில் எத்னால் கோஷ்டியினர் கலந்து கொள்ளவில்லை. மாற்றாக தனியாக பாதயாத்திரை, போராட்டங்களை நடத்தினர்.
உச்சக்கட்டமாக, விஜயேந்திரா, காங்கிரசுடன் இணக்கம் காட்டுவதாக எத்னால் கோஷ்டியினர் கூறினர். எனவே, அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறி வந்தனர். பா.ஜ., உட்கட்சி பூசலை, காங்கிரசார் தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டனர்.
மிகுந்த பரபரப்பிற்கு இடையில், பெங்களூரில் நேற்று முன்தினம் பா.ஜ., உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால் பங்கேற்றார்.
உட்கட்சி பூசல், கோஷ்டி மோதல், தலைவர் மாற்றம், எத்னால் மீது நடவடிக்கை போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் விஜயேந்திரா, எத்னால் தரப்பினர் கலந்து கொண்டனர்.
இரு தரப்பினரும் மற்றவர்கள் மீது காரசாரமாக குற்றம் சாட்டினர்.
'விஜயேந்திராவை கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்' என, எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ஹரிஷ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அரவிந்த் லிம்பாவளி, குமார் பங்காரப்பா அடங்கிய எத்னால் கோஷ்டியினர் வலியுறுத்தினர்.
திட்டவட்டம்
இது குறித்து பா.ஜ., தேசிய பொது செயலர் ராதா மோகன் தாஸ் அகர்வால் கூறுகையில், ''மாநில தலைவரை மாற்றும் அதிகாரம், தேசிய தலைமையிடமே உள்ளது. வேறு யாருக்கும் உரிமை இல்லை. மூன்று எம்.எல்.ஏ.,க்கள் குழுவாக சேர்ந்து கொண்டு, கோரிக்கை வைத்தாலும் கட்சி தலைவரை மாற்ற முடியாது.
''கட்சி தலைமை பற்றி தவறாக பேசியதற்கு எத்னாலுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. எத்னாலின் பதிலை பொறுத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவில், 'எத்னால் வெர்சஸ் விஜயேந்திரா'; 'எத்னால் வெர்சஸ் பா.ஜ.,' என எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., மேலிட பொறுப்பாளரின் அதிரடி அறிவிப்பால், எத்னால் கோஷ்டியினர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க முடிவு செய்துள்ளனர்.
-- நமது நிருபர் -