குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகா புறக்கணிப்பு: சித்தராமையா குற்றச்சாட்டு
குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகா புறக்கணிப்பு: சித்தராமையா குற்றச்சாட்டு
ADDED : ஜன 10, 2024 12:38 AM
பெங்களூரு : 'ஜனவரி 26ல், டில்லியில் நடக்கவுள்ள குடியரசு தினத்தின் அணி வகுப்பில், கர்நாடகாவின் ஊர்திக்கு வாய்ப்பு அளிக்காததன் மூலம், மத்திய பா.ஜ., அரசு மாநிலத்தின் ஏழு கோடி மக்களை அவமதித்துள்ளது' என, முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், நேற்று அவர் கூறியிருப்பதாவது:
ஜனவரி 26ல், டில்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடக்கவுள்ளது. இதில் கர்நாடக ஊர்திக்கு மத்திய அரசு வாய்ப்பளிக்கவில்லை.
இதன் மூலம் ஏழு கோடி கன்னடர்களை அவமதித்துள்ளது. பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, தன் தவறை திருத்தி, குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடக ஊர்திக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
கடந்தாண்டும் கூட, முதலில் கர்நாடக நினைவூர்திக்கு வாய்ப்பு மறுத்தது. இது சர்ச்சைக்கு காரணமானதால், அனுமதி அளித்தது. இம்முறையும் கன்னடர்களை அவமதிப்பதை தொடர்ந்துள்ளது.
மாநிலத்தின் வளர்ச்சி, சமூக நியாய ஊர்தி, நீர்ப்பாசனம், பேங்கிங், அடிப்படை வசதிகள் வளர்ச்சி, மைசூரை முன் மாதிரி ராஜ்ஜியமாக உருவாக்கிய நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் ஊர்தி, பெங்களூரின் கிராம தேவதை, 10ம் நுாற்றாண்டில் கட்டிய அன்னம்மா தேவி கோவில் ஊர்தி உட்பட, நான்கு ஊர்திகளுக்கு அனுமதி கோரி, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் மத்தியின் தேர்வு கமிட்டி, எங்கள் வேண்டுகோளை நிராகித்தது. மாநிலத்தின் சாதனை மற்றும் சாதனையாளர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பை பறிக்கிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருப்பதை, பா.ஜ.,வால் சகிக்க முடியவில்லை.
வரி பங்கு அளிப்பதில் அநியாயம், வறட்சி நிர்வகிப்பில் அநியாயம், கன்னடர்கள் உருவாக்கிய வங்கி, துறைமுகம், விமான நிலையங்களை விற்பது என, ஒவ்வொரு விஷயத்திலும், மத்திய அரசு தீய நோக்கத்துடன் அரசியல் செய்கிறது.
இப்போது ஊர்திக்கும் அனுமதி மறுத்துள்ளது.
கன்னடர்களின் பொறுமையை, மத்திய அரசு சோதித்து பார்க்க கூடாது. இப்போதும் காலம் மிஞ்சவில்லை. மத்திய அரசு தன் தவறை திருத்திக்கொண்டு, கர்நாடகாவுக்கு நேர்ந்த அநியாயத்தை சரி செய்ய வேண்டும். குடியரசு தினம் அணிவகுப்பில் கர்நாடக ஊர்திக்கு அனுமதியளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

