இன்று கர்நாடக பட்ஜெட் தாக்கல் கவர்ச்சி திட்டங்கள் இருக்குமா?
இன்று கர்நாடக பட்ஜெட் தாக்கல் கவர்ச்சி திட்டங்கள் இருக்குமா?
ADDED : பிப் 16, 2024 07:23 AM

பெங்களூரு: நிதித்துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா, 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை இன்று காலை 10:15 மணிக்கு தாக்கல் செய்கிறார். இவர் தாக்கல் செய்யும் 15வது பட்ஜெட் இதுவாகும். லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், இம்மாதம் 12ம் தேதி துவங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், சட்டசபை, சட்ட மேலவை கூட்டுக் கூட்டத்தொடரில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அன்றைய தினம் உரையாற்றினார்.
அரசு தரப்பில் பதில்
மறுநாள் முதல், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. நேற்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நிதித்துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா, 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை இன்று காலை 10:15 மணிக்கு தாக்கல் செய்கிறார். இவர் தாக்கல் செய்யும் 15வது பட்ஜெட் இது.
முன்னதாக, இன்று காலை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் ஒப்புதல் பெறுவார்.
ரூ. 3.80 லட்சம் கோடி
நடப்பாண்டு, 3.27 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். இம்முறை, 3.80 லட்சம் கோடி ரூபாய் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, மகளிர், இளைஞர்கள், விவசாயிகளுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. பட்ஜெட் பற்றி நேற்று, முதல்வர் இறுதிகட்ட பரிசீலனை செய்தார்.
காங்கிரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்களால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் அறிவிக்கும் பட்சத்தில் நிதி திரட்டுவதற்கு எத்தகைய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
சட்டசபை தேர்தலின்போது, பொய் வாக்குறுதிகளை அளித்து, சித்தராமையா அரசு ஆட்சிக்கு வந்தது. லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, அதே போன்று பட்ஜெட்டில் நாடகம் ஆட முயற்சிக்கிறார்.
மக்கள் புத்திசாலிகள்
ஆனால், மாநிலத்தின் மக்கள் புத்திசாலிகள். அவர்களை அடிக்கடி ஏமாற்ற முடியாது. ஆட்சிக்கு வந்து, 9 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை.
அரசு கஜானா காலியாகிவிட்டது. திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்படவில்லை. பட்ஜெட் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியவில்லை. எங்கள் காதுகளில் பூ சுற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.