ADDED : அக் 26, 2025 11:45 PM

பெலகாவி: கர்நாடகாவில், 2023ம் ஆண்டு மே 20ல் காங்., அரசு பொறுப்பேற்றது. முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். அடுத்த மாதத்துடன், ஆட்சிக்கு இரண்டரை ஆண்டுகள் முடிகிறது. மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு பதில் இரண்டு, மூன்று முறை வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அதில் சிலர், டில்லி மேலிடத்தின் எதிர்பார்ப்பின்படி செயல்படவில்லை. இதனால், அவர்களை நீக்கிவிட்டு மூத்த எம்.எல்.ஏ.,க்கள், புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மேலிடம் திட்டமிட்டது. அக்டோபர் அல்லது நவம்பரில் அமைச்சரவையில் மாற்றம் நடக்கலாம் என்று பேச்சு அடிபட்டது.
பெலகாவியில் நேற்று சித்தராமையா அளித்த பேட்டி:
அமைச்சரவையை மாற்றி அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி, கட்சி மேலிடம் நான்கு மாதங்களுக்கு முன்பே என்னிடம் கூறியது. இரண்டரை ஆண்டுகள் முடிந்த பின், அமைச்சரவையை மாற்றி அமைக்கலாம் என்று நான் கூறியிருந்தேன். அடுத்த மாதத்துடன், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிகிறது.அந்த மைல் கல்லை எட்டியதும், நான் டில்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவேன். அவர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன்.
நவம்பர் 16ல் டில்லி செல்கிறேன். மூத்த வக்கீல் கபில் சிபில் எழுதிய, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். பின், மேலிட தலைவர்களை சந்தித்து மாநில நிர்வாகம், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி எடுத்து கூறுவேன். நான் டில்லி சென்று வந்த பின், அமைச்சரவையில் மாற்றம் நடக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், துணை முதல்வர் சிவ குமார் நேற்று திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் கூறுகையில், ''நான் டில்லிக்கு செல்வது புதிது இல்லை. எனக்கு வேலை இருக்கும்போது அங்கு செல்கிறேன். கட்சி மேலிட தலைவர்களை சந்திக்கிறேன். வழக்கு விசாரணைக்கு செல்கிறேன். அமைச்சரவை மாற்றம் குறித்து என்னிடம் சரியான தகவல் இல்லை. அப்படி ஏதாவது இருந்தால், முதல்வர் என்னுடன் கண்டிப்பாக விவாதிப்பார்,'' என்றார்.

