பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு விவிஐபி வசதி; உயரதிகாரிகள் 2 பேர் டிஸ்மிஸ்
பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு விவிஐபி வசதி; உயரதிகாரிகள் 2 பேர் டிஸ்மிஸ்
ADDED : நவ 10, 2025 04:12 PM

பெங்களூரு; கர்நாடகாவில் சிறை கைதிகள் சொகுசாக இருக்க வசதிகள் ஏற்படுத்தி தந்த கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூருவில் உள்ளது பரப்பன அக்ரஹாரா சிறை. இந்த சிறையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் ஏராளமானோர் உள்ளனர்.
அந்த வகையில் தொடர் பாலியல் வன்கொடுமை, 16 பெண்களை கொன்ற உமேஷ் ரெட்டி என்பவர், பிரபல நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய தருண் ராஜூ ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இருவரும் சிறைக்குள் சர்வ சாதாரணமாக செல்போனை பயன்படுத்துவது, உள்ளேயே தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
கொடூர குற்றங்களில் தண்டனை அனுபவித்து வருபவர்களுக்கு விதிகளை மீறி செய்து தரப்பட்டுள்ள இந்த வசதிகள் பெரும் விமர்சனத்தையும், கண்டனத்தையும் எழுப்பியது. விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறி இருந்தார்.
இந் நிலையில் சிறையின் கண்காணிப்பாளர் மகேரி மற்றும் உதவி கண்காணிப்பாளர் அசோக் பஜன்த்ரி ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூருவில் நிருபர்களிடம் பேசுகையில், உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா இதை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;
ஆன்லைனில் பரவி வரும் சில வீடியோக்கள், போட்டோக்கள் பழையவை. இருப்பினும் சிறை நிர்வாகத்தில் இருக்கும் குறைபாடுகளை அவை உறுதிப்படுத்துகின்றன.
சிறைக்குள் சட்டவிரோத செயல்கள் அரங்கேறியதாக செய்திகள் வெளியாகின. இது உண்மையா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. சில வீடியோக்கள், போட்டோக்கள் பரவி வருகின்றன. அவை 2023ம் ஆண்டில் வந்தவை. ஒன்று அல்லது இரண்டு போட்டோக்கள் மட்டுமே சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை.
இதற்கு 3 பேர் பொறுப்பாவார்கள். சிறையின் தலைமை கண்காணிப்பாளர் சுரேஷ் உடனடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஒரு ஐபிஎஸ் அதிகாரி நிர்வாகத்தை கவனிப்பார். இனி பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் கண்காணிப்பில் நிர்வகிக்கப்படும்.
சிறைச்சாலையில் நடக்கும் அனைத்தையும் மறு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். சிறை கண்காணிப்பாளர் மேக்ரி, ஏஎஸ்பி அசோக் பஜன்த்ரி இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறினார்.

