நீதிபதி இப்படி பேசலாமா? லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய சுப்ரீம் கோர்ட்
நீதிபதி இப்படி பேசலாமா? லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய சுப்ரீம் கோர்ட்
ADDED : செப் 20, 2024 01:04 PM

புதுடில்லி: சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கர்நாடக ஐகோர்ட் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நில உரிமையாளருக்கும், குத்தகைதாரருக்கும் இடையிலான பிரச்னை குறித்த வழக்கு பெங்களூருவில் உள்ள கர்நாடகா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி, வேதவ்யாசச்சர் ஸ்ரீ ஷனாந்தா விசாரித்தார்.
அப்போது, அவர் பெங்களூருவில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் எனக் குறிப்பிட்டதுடன், பெண் வக்கீல் முகம் சுழிக்கும் விதமான கருத்துக்களையும் கூறியது பெரும் சர்ச்சையானது.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரிக்கத் துவங்கியது. இன்றைய விசாரணையின் போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், 'நீதிபதிகள் எந்த மாதிரியான கருத்துக்களை கூற வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் உன்னிப்பாக கவனிக்கின்றனர். எனவே, அதனை மனதில் வைத்து நீதிபதிகள் செயல்பட வேண்டும்', எனக் கூறினார்.
மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் விளக்கத்தைக் கேட்டு, 2 நாட்களுக்குள் கர்நாடகா ஐகோர்ட் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், என உத்தரவிட்டு, வழக்கு விசாரணை செப்டம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.