sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு...  மீண்டும் சிக்கல்! ஆணைய பரிந்துரைப்படி நடக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

/

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு...  மீண்டும் சிக்கல்! ஆணைய பரிந்துரைப்படி நடக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு...  மீண்டும் சிக்கல்! ஆணைய பரிந்துரைப்படி நடக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு...  மீண்டும் சிக்கல்! ஆணைய பரிந்துரைப்படி நடக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

3


ADDED : நவ 14, 2025 05:38 AM

Google News

ADDED : நவ 14, 2025 05:38 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மேகதாது அணை விவகாரத்தில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் அடிப்படையில் தான், மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக, தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்னை நீடித்து வருகிறது.

மழைக்காலங்களில் உபரியாக வரும் நீரை மட்டும் காவிரியில் திறந்துவிட்டு, தமிழகத்திற்கான பங்கீட்டை அளவுக்கு அதிகமாக வழங்கி விட்டதாக ஒவ்வொரு முறையும் கர்நாடகா கூறி வருகிறது.

இந்தச் சூழலில், பெங்களூரு அருகே ராம்நகர் மாவட்டத்தில் மேகதாது பகுதியில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, மத்திய நீர்வள ஆணையத்திடம் கடந்த 2018ல் சமர்பித்திருந்தது.

'இதன் மீது மத்திய அரசு எந்த பரிசீலனையும் செய்யக்கூடாது, அதை கர்நாடக அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்' என, வலியுறுத்தி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பாதிப்பு அதே போல், மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் தரக்கோரி, கர்நாடக அரசு சார்பிலும் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும் தமிழக விவசாய சங்கங்கள் சார்பிலும், காவிரி நதிநீர் திறப்பு விவகாரங்களுக்காகவும் அவ்வப்போது இடைக்கால மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்ஜாரியா அடங்கிய அமர்வில்நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி முன்வைத்த வாதம்:

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, காவிரி நதிநீரை கேட்டு கர்நாடக அரசிடம் போராடி வருகிறோம். ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை நாடிதான் தீர்வை பெற்று வருகிறோம்.

அவ்வாறு இருக்கையில், காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடகா புதிதாக அணை கட்டு வதை எப்படி ஏற்க முடியும்.

இதனால், தமிழகத்தி ற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் எழும். கபிணி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரை தடுத்து, 80 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்கவே, மேகதாது அணை திட் டத்தை கர்நாடக அரசு கையில் எடுத்துள்ளது.

இதனால், தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும். லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

மேலும், கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள விரிவான திட்ட அறிக்கையின் மீது தன்னிச்சையாக முடிவெடுக்க, மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே, கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு வாதங்களை முன்வைத்தார்.

எதிர்ப்பு புதுச்சேரி, கேரள அரசுகள் சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினர்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் பிரச்னை எந்தக் காலத்திலும் முடிவடைய போவதில்லை. காவிரி நதிநீர் விவகாரம், 50 ஆண்டுகளுக்கு முன் எங்கு துவங்கியதோ, மீண்டும் அதே இடத்திற்கு தான் தற்போது வந்துள்ளது.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தயாரித்த விரிவான திட்ட அறிக்கையை எதிர்த்து, தமிழக அரசு இப்போதே உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்க வேண்டியதில்லை. ஏனெனில், அந்த திட்ட அறிக்கை மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மேலும், காவிரி நதிநீர் விவகாரத்தில் தீர்வு காண்பதற்கான அம்சங்களை ஏற்கனவே பிறப்பித்த இறுதி தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.

அதன் அடிப்படையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எனவே, காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையின் மீது, இரு ஆணையங்களும் முன்வைக்கும் பரிசீலனைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் தான், மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்.

தவிர, தமிழக அரசு முன்வைக்கும் ஆட்சேபனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அந்த உத்தரவு மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உடனடியாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அணுகலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை

கர்நாடக துணை முதல்வர் கருத்து

கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சரும், துணை முதல்வருமான சிவகுமார் அளித்த பேட்டி: மேகதாது அணை தொடர்பாக தமிழகத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, கர்நாடகாவுக்கு கிடைத்த நியாயமான முடிவு. நாங்கள் கேட்டதும் இதைத்தான். 'எங்கள் உரிமை, எங்கள் தண்ணீர்' என்ற பெயரில் போராட்டம் நடத்தினோம். நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. எங்கள் இடத்தில், எங்கள் நிதியை கொண்டு அணையை நாங்கள் கட்டுவோம். மழை குறைவாக இருக்கும்போது தமிழகத்திற்கு உதவுவோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெங்களூரு மக்களுக்கு கிடைத்த வெற்றி. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழகம் பணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். மேகதாது அணை திட்டம் எந்த வகையிலும் தமிழகத்தை பாதிக்காது. உண்மையில் இந்த திட்டம், அவர்களுக்கு நிறைய பயன் அளிக்கும். மேகதாது திட்டத்திற்கு அனுமதி கொடுப்பதை தவிர, மத்திய நீர்வள ஆணையத்திற்கு வேறு வழி இல்லை. மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து வலியுறுத்துவேன். பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அழுத்தம் கொடுக்கும்படி, கர்நாடக எம்.பி.,க்களை சந்தித்து பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

--- நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us