ADDED : டிச 26, 2024 04:46 AM
பெங்களூரு: கர்நாடக மகளிர் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் - பா.ஜ., - எம்.எல்.சி., ரவி மோதல் விவகாரத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பெயரை இழுக்க, கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் தடை விதித்து உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
பெலகாவியில் சமீபத்தில் நடந்த மேல்சபை கூட்டத்தில், கர்நாடக மகளிர் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி ஆபாசமாக திட்டியதாக கூறப்படும் பிரச்னை, விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
'ஆபாச வார்த்தையை பயன்படுத்தவில்லை' என்று ரவி கூறினாலும், 'அவர் பயன்படுத்தினார்' என்று காங்கிரஸ் தலைவர்கள் சொல்கின்றனர்.
இப்பிரச்னைக்கு மூல காரணமே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பற்றிய ரவி பேச்சால் தான் ஆரம்பித்தது.
'ராகுல், போதைப் பொருள் பயன்படுத்துபவர்' என ரவி கூறியதால், அவரை பார்த்து, 'கொலைகாரர்' என்று லட்சுமி கூறினார். பதிலுக்கு ரவி, லட்சுமியை ஆபாசமாக திட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த பிரச்னையை, ராகுல் கவனத்திற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
இதை கேட்டு அவர், கடும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.
'என் பெயரை வைத்து, இந்த பிரச்னையை, இனி யாரும் பேசக் கூடாது' என்று கூறி இருக்கிறார்.
இதையடுத்து, கட்சி பொதுச் செயலர் வேணுகோபால், கர்நாடக காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டு, 'லட்சுமி - ரவி மோதல் குறித்து பேசுகையில், இனி ராகுல் பெயரை யாரும் பயன்படுத்த கூடாது' என்று உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.