சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கடையடைப்பு!: ஹொன்னாளியில் அஹிந்தா சமூகத்தினர் பேரணியால் பரபரப்பு
சித்தராமையாவுக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கடையடைப்பு!: ஹொன்னாளியில் அஹிந்தா சமூகத்தினர் பேரணியால் பரபரப்பு
ADDED : ஆக 08, 2024 06:10 AM

தாவணகெரே: 'மூடா' முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து, ஹொன்னாளியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. முதல்வருக்கு ஆதரவாக அஹிந்தா சமூகத்தினர், பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வரின் சொந்த ஊரான மைசூரில் உள்ள மூடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், பயனாளிகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் 4,000 கோடி ரூபாய்க்கு, முறைகேடு நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மூடா முறைகேட்டை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்றும், கோரிக்கை வலுத்து உள்ளது. ஆனால் சி.பி.ஐ.,க்கு கொடுக்க அரசு மறுக்கிறது. மூடா முறைகேடு பா.ஜ., ஆட்சியில் நடந்தது என்று ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர்.
பீதியில் முதல்வர்
மூடா முறைகேட்டில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக, சமூக ஆர்வலர் ஆபிரஹாம், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து மனு கொடுத்தார். முதல்வரிடம் லோக் ஆயுக்தா விசாரிக்க, உத்தரவிட வேண்டும் என்றும் கவர்னரிடம் கேட்டு கொண்டார். இதையடுத்து முதல்வர் மீது விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து, சட்ட வல்லுனர்கள் கருத்தை கவர்னர் பெற்றுள்ளார்.
முதல்வருக்கும், நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எந்த நேரத்திலும் சித்தராமையாவிடம் விசாரிக்க, கவர்னர் உத்தரவிடலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனால் சித்தராமையா பீதியில் உள்ளார். ஆனாலும் வெளிக்காட்டி கொள்ளவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கவர்னர் அனுப்பிய, நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாலைகள் வெறிச்
அரசியல் ரீதியாக முதல்வரை ஒடுக்க முயற்சிகள் நடப்பதாக, அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வருக்கு அனுப்பிய நோட்டீசை கவர்னர் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி, தாவணகெரே மாவட்டம் ஹொன்னாளியில் 7ம் தேதி (நேற்று) கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று, அஹிந்தா எனும் அனைத்து சமூகங்களை உள்ளடக்கிய அமைப்பு அறிவித்து இருந்தது.
இதன்படி நேற்று காலை 6:00 மணி முதல் கடையடைப்பு போராட்டம் துவங்கியது. பஸ் நிலையம், முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும், சாலைகள் வெறிச்சோடி இருந்தன.
ஹொன்னாளி பஸ் நிலையத்திற்கு, குறைந்த அளவில் பஸ்கள் வந்து சென்றன. தெருவோர வியாபாரிகளும், கடை அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். நேற்று மாலை 3:00 மணி வரை, கடையடைப்பு நடந்தது. அதன்பின் வணிக நடவடிக்கைகள் வழக்கம்போல நடந்தன.
வீண் பழி
இதற்கிடையில், ஹொன்னாளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சாந்தனகவுடா தலைமையில், டி.பி.,சதுக்கம் பகுதியில், அனைத்து சமூகத்தினரும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளை கண்டித்து கோஷம் எழுப்பியதுடன், கவர்னர் நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.
பின், நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
'சித்தராமையா அனைத்து சமூகத்தினருக்குமான தலைவர். அவர் மீது வீண் பழி போடுவதை ஏற்க முடியாது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஆகியோர், ஊழல் செய்து சிறைக்கு சென்று வந்தவர்கள். அவர்கள் பேச்சை கேட்டு, முதல்வருக்கு, கவர்னர் நோட்டீஸ் அனுப்பியதை ஏற்றுக்கொள்ள முடியாது. நோட்டீசை திரும்ப பெறாவிட்டால், மாநிலம் முழுதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்' என்று, அஹிந்தா சமூகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.