பிள்ளைகளை வளர்க்கும் எடியூரப்பா பிரதாப் சிம்ஹா மறைமுக குற்றச்சாட்டு
பிள்ளைகளை வளர்க்கும் எடியூரப்பா பிரதாப் சிம்ஹா மறைமுக குற்றச்சாட்டு
ADDED : ஆக 08, 2024 06:09 AM

மைசூரு: ''எந்த அரசியல்வாதியும், அவர்களின் தந்தை போல், கஷ்டப்பட்டு வரவில்லை. தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்காக, மற்றவர்களின் பிள்ளைகளை அப்பாக்கள் பலிகடா ஆக்குகின்றனர்.
''இத்தகைய அரசியல் நடைமுறைக்கு தான் நானும் பலிகடா ஆகி உள்ளேன்,'' என பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.
மைசூரு லோக்சபா தொகுதியில், 2014, 2019 என இரண்டு முறை தொடர்ந்து எம்.பி.,யாக இருந்தவர் பா.ஜ.,வின் பிரதாப் சிம்ஹா. இம்முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மாநில தலைவர்கள் மீது கடும் விரக்தியில் இருக்கிறார். லோக்சபா தேர்தலுக்கு பின், பொது இடங்களில் காணப்படவில்லை. திடீரென கடந்த வாரம், அதிருப்தி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக மைசூரு பாதயாத்திரையிலும் பங்கேற்று, காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.
அதிருப்தி குறித்து, ஒரு கன்னட பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டி:
பா.ஜ., கட்சி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. 2014ல், 274 தொகுதிகளில் வெற்றி பெற்ற போது, நரேந்திர மோடியின் அதிர்ஷ்டத்தால் தான் இது சாத்தியமாயிற்று என்று அத்வானி கூறி இருந்தார்.
பா.ஜ., என்பது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஒரு அங்கம். கொஞ்சம் ஏதாவது தவறு செய்தாலும், ஆர்.எஸ்.எஸ்., எங்களின் காதை திருகும். ராமர் ஒருவனே ராவணனை அழிக்க முடிந்திருக்கும். ஆனால், அனைவரையும் ஒன்றாக அழைத்து சென்றார்.
இன்று நரேந்திர மோடிக்கு தலைமை பண்பு உள்ளது. நாளை அது யோகி ஆதித்யநாத்துக்கு வரலாம். நான் 13 ஆண்டுகளாக நிருபராக பணியாற்றினேன். சிறிய வயதிலேயே கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன். நிருபரான பின், மக்கள் நலனுக்காக வக்காலத்து வாங்கி எழுதினேன்.
ஆனால், மக்களுக்கு நேரில் உதவ வேண்டும் எனில், அரசியலுக்கு வந்தால் மட்டுமே முடியும் என்று கருதினேன். அதன்பின், மைசூரு வேட்பாளர் என்று மோடி என்னை அறிவித்தார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் என்னை ஆசிர்வதித்தனர்.
சித்தராமையா முதல்வராக இருந்த 2014ல், மாவட்டத்தில் ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், நான் எம்.பி.,யானேன்.
பத்து ஆண்டுகளில், 13 ரயில்களை மைசூரு தந்துள்ளேன். விமான நிலைய விரிவாக்கம், புதிய ரயில் நிலையம், தேசிய நெடுஞ்சாலைகள் இப்படி பல வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன்.
எந்த அரசியல்வாதியும், அவர்களின் தந்தை போல், கஷ்டப்பட்டு வரவில்லை. தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்காக, மற்றவர்களின் பிள்ளைகளை அப்பாக்கள் பலிகடா ஆக்குகின்றனர்.
இத்தகைய அரசியல் நடைமுறைக்கு தான் நானும் பலிகடா ஆகி உள்ளேன். எடியூரப்பா, சைக்கிளில் பயணம் செய்து, கட்சியை வளர்த்தார். சித்தராமையா, தன் மகனை எம்.எல்.சி., ஆக்கியுள்ளனர். முதல்வர் பதவியில் இருந்து, சித்தராமையா இறங்கினால், அவரது மகன் யதீந்திராவுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்பர்.
மல்லிகார்ஜுன கார்கே, பாபுராவ் சின்சன்சூர், கமருல் இஸ்லாம், உமேஷ் ஜாதவ், குமாரசாமி இப்படி பல தலைவர்களும், தங்கள் பிள்ளைகளுக்காக, மற்றவர்களை பலிகடா ஆக்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
எடியூரப்பாவின் ஒரு மகன் எம்.பி.,யாகவும்; மற்றொரு மகன் எம்.எல்.ஏ., மற்றும் மாநில தலைவராகவும் இருக்கின்றனர். இதையே மறைமுகமாக பிரதாப் சிம்ஹா சுட்டிக்காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.