மாசு சான்று இணைக்கப்படாததால் கர்நாடக வாகனங்களுக்கு மற்ற மாநிலங்களில் அபராதம்
மாசு சான்று இணைக்கப்படாததால் கர்நாடக வாகனங்களுக்கு மற்ற மாநிலங்களில் அபராதம்
ADDED : டிச 31, 2025 04:57 AM
பெங்களூரு: கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வெளிமாநிலங்களுக்கு ஓட்டிச் செல்லும்போது, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியானதாக கூறி, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் அரசின் தனி இணையதளம் வழியாக வழங்கப்படுகின்றன. இது மத்திய அரசின், 'பரிவாஹன்' எனப்படும் தேசிய வாகன தரவுத்தளம் உடன் இணைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஒடிசா, கோவா போன்ற மாநிலங்களில், சிக்னல்களில் போக்குவரத்து கண்காணிப்புக்காக பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், கர்நாடக வாகனங்களை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியான வாகனங்களாக பதிவு செய்து, தானாக அபராதம் விதிக்கின்றன.
மோட்டார் வாகன சட்டப்படி, மாசு கட்டுப்பாட்டு சான்று இல்லாமல் வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கர்நாடக வாகனங்களில் செல்லும் பலருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைதளங்களில் இது குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

