ஜெயின் கமிஷனில் கருணாநிதி சாட்சியம்; டில்லியில் அன்று நடந்தது என்ன?
ஜெயின் கமிஷனில் கருணாநிதி சாட்சியம்; டில்லியில் அன்று நடந்தது என்ன?
UPDATED : ஜன 05, 2026 10:27 AM
ADDED : ஜன 05, 2026 06:53 AM

கடந்த 1991ல் முன்னாள் பிரதமர் ராஜிவ், விடுதலைப் புலிகளால் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டது தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த கொலையின் பின்ணணி என்ன? இதில் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? இப்படி விலாவாரியாக ஆராய ஒரு நபர் கமிஷன் நியமிக்கப்பட்டது.
ஜெயின் கமிஷன்
இந்த கமிஷனின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மிலாப் சந்த் ஜெயின். டில்லியில் பார்லிமென்டுக்கு அருகே விக்யான் பவன் அமைந்துள்ளது. அப்போதெல்லாம் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் இங்கு நடப்பது வழக்கம். உள்ளே போக ஏகப்பட்ட செக்யூரிட்டி கெடுபிடி இருக்கும். முதல்வர்கள் மாநாடு போன்றவை கூட இந்த பவனில் நடத்தப்பட்டன.
இந்த விக்யான் பவனுக்கு பக்கத்தில் குட்டியாக ஜூனியர் விக்யான் பவன் கட்டடம். விக்யான் பவன் அனெக்ஸி என பெயர். ஜெயின் கமிஷன் அலுவலகம் இங்கிருந்துதான் செயல்பட்டது. தமிழ் வார இதழுக்காக டில்லியில் பணியாற்றியபோது ஜெயின் கமிஷன் விசாரணை தொடர்பான செய்தி சேகரிக்க தினமும் விக்யான் பவனுக்கு சென்று வந்தேன்.
பிடிஐயிலிருந்து சீனியர் ரிப்போர்ட்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் வேறு சில பத்திரிகையாளர்களும் வருவார்கள். விக்யான் பவன் அனெக்சியில் பல அறைகள் ஜெயின் கமிஷனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.
25 பேர் அமரக் கூடிய ஒரு விசாலமான அறையில் விசாரணைகள் நடைபெற்றன. கோர்ட் போலவே அந்த அறை இருந்தது. இரண்டு பக்கமும் வக்கீல்கள், அவர்களுடைய ஜூனியர்கள். இவர்களுக்கு பின்னால் பார்வையாளர்கள் அமர நாற்காலிகள். இவர்களுக்கு எதிரே, நடு நாயகமாக உயர்ந்த பீடத்தில் நாற்காலியில் நீதிபதி ஜெயின் அமர்ந்திருப்பார்.
தமிழக அரசியல் தலைவர்கள் சாட்சியம்
தமிழகத்தில் ராஜிவ் கொல்லப்பட்டதாலும், அதுவும் தேர்தல் பிரசாரத்தின்போது இது நடந்ததாலும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் ஜெயின் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. அந்த தலைவர்கள் டில்லிக்கு வந்து ஜெயின் கமிஷன் முன் சாட்சியம் சொன்னார்கள்.
அதிமுக, திமுக என கட்சி வழக்கறிஞர்கள் இந்த சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தனர்.சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் இங்கு வரும் போது கூடவே தொண்டர்களும் ரயில் ஏறி இங்கு வந்தனர். சாட்சி சொல்லும்போது பார்வையாளர்கள் அமரும் இடம் இப்படிப்பட்ட தொண்டர்களால் ஆக்ரமிக்கப்படும்.
கருணாநிதி சாட்சியம்
திமுக தலைவர் கருணாநிதி ஜெயின் கமிஷன் முன் ஆஜாரானார். இவர் தமிழில் சாட்சியம் சொல்ல ஆரம்பித்த உடன், நீதிபதி ஜெயினுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே, 'யாராவது கருணாநிதி சொல்வதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்ல முடியுமா' என கேட்டார். இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள கே.வி.விஸ்வநாதன் அப்போது அதிமுகவின் வழக்கறிஞராக ஆஜாராகியிருந்தார்.
“நான் மொழி பெயர்த்து சொல்கிறேன்” என விஸ்வநாதன் சொல்ல, 'இதில் யாருக்காவது ஆட்சேபணை உண்டா' என கேட்டார் நீதிபதி. கருணாநிதி உட்பட அனைவரும் ஒத்துக் கொண்டனர். இதன் பிறகு கருணாநிதி சாட்சியத்தை விஸ்வநாதன் தான் மொழி பெயர்த்து நீதிபதிக்கு தெரிவித்தார். அப்போது கருணாநிதி முதல்வராக இருந்தார். அவரை ஐயா என மரியாதையுடன் அழைத்து விசாரணை நடத்தினார் விஸ்வநாதன்.
திமுகவினரின் கூச்சல்
மதிமுக தலைவர் வைகோ சார்பாக ஒரு கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ஆஜரானார். அவர் கருணாநிதியை குறுக்கு விசாரணை செய்தார். அவர் ஆங்கிலத்திலும், மலையாளம் கலந்த தமிழிலும் கருணாநிதியிடம் கேள்விகளைக் கேட்டார்.
'மிஸ்டர் கருணாநிதி' என அந்த வழக்கறிஞர் ஆரம்பித்த உடனே, பார்வையாளர்கள் பகுதியிலிருந்து கூச்சல். 'யாரைப் பார்த்து பேரைச் சொல்லி கூப்பிடுகிறாய், கலைஞர்ன்னு சொல்லு' என பார்வையாளர் வரிசையில் இருந்த ஒரு திமுக நிர்வாகி கூச்சல் போட்டார்.
உடனே மற்ற திமுகவினரும், 'தலைவர் பேரை சொன்ன, அவ்வளவுதான்' என மிரட்ட ஆரம்பித்தனர். ஆனால் அந்த வழக்கறிஞர் தொடர்ந்து, 'மிஸ்டர் கருணாநிதி' என சொல்ல ஒரே ரகளை.
கோபத்தில் நீதிபதி
இதைப் பார்த்த நீதிபதி ஜெயினுக்கு கோபம்.
''அமைதியாக இருக்காவிட்டால் அனைவரும் வெளியே போய்விடுங்கள்,” என கண்டிப்பான குரலில் கூறினார்.
''இப்படி கூச்சல் போடத்தான் வந்திருக்கிறீர்களா அல்லது உங்கள் தலைவர் என்ன பேசுப் போகிறார் என்பதைக் கேட்க வந்திருக்கிறீர்களா,'' என கேட்ட நீதிபதி ஜெயின்…கருணாநிதியைப் பார்த்து சொன்னார்.
''உங்கள் கட்சியினரை அமைதியாக இருக்க சொல்லுங்கள். இல்லையென்றால் வெளியே அனுப்ப வேண்டியிருக்கும்,'' என்று கூறினார்.
நீதிபதியின் கோபத்தை பார்த்த கருணாநிதி, பின்னால் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து கையசைத்து, 'அமைதியாக இருங்கள்' என சைகை காட்ட, அறை அமைதியானது. பின்னர் வைகோவின் வக்கீல், 'மிஸ்டர் கருணாநிதி' என்றுதான் கேள்வி கேட்டார். தமிழகத்தில் மட்டும்தான் இப்படி அடைமொழியில் தலைவர்களை அழைக்கின்றனர். இந்த பழக்கம் வட நாட்டில் இல்லை.
மத்தியில் ஆட்சி கவிழ காரணம் ஜெயின் கமிஷன்
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் வளர காரணம் திமுக அரசின் ஆதரவு. இதனால்தான் ராஜிவ் கொல்லப்பட்டார் என திமுகவை குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன். அப்போது ஐக்கிய முன்னணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தது. இந்த கூட்டணியில் திமுகவும் இருந்ததோடு அமைச்சரவையிலும் பங்கெடுத்துக் கொண்டிருந்தது. இந்தர் குமார் குஜ்ரால் பிரதமர்.
'திமுகவை வெளியேற்றினால் அரசு பிழைக்கும்' என காங் சொல்ல, 'முடியாது' என குஜ்ரால் மறுத்தார். காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற, குஜ்ரால் ஆட்சி கவிழ்ந்தது. இப்படி திமுகவை வைத்து அரசியல் செய்த காங்கிரசுடன் இப்போது திமுக கூட்டணியில் உள்ளதே என கேட்டால்…''அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா'' என்கிற கவுண்டமணியின் வார்த்தைகள்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.
- அ.வைத்தியநாதன்

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
இந்த தொடரின் அடுத்த கட்டுரை, ஜனவரி 8ம் தேதி வியாழக்கிழமை காலை 7:00 மணிக்கு (இந்திய நேரம்) வெளியாகும்.

