தொடர்ந்து ஏழு மணி நேரம்; சிபிஐ விசாரணை முடிந்து வெளியில் வந்தார் விஜய்!
தொடர்ந்து ஏழு மணி நேரம்; சிபிஐ விசாரணை முடிந்து வெளியில் வந்தார் விஜய்!
UPDATED : ஜன 12, 2026 09:12 PM
ADDED : ஜன 12, 2026 11:37 AM

நமது டில்லி நிருபர்
டில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று ஏழு மணி நேரம் நடந்த விசாரணை, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த ஆண்டு செப்., 27 ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரிடம் விசாரணை முடிந்த நிலையில், இன்று விஜய் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். அதை ஏற்ற விஜய், தனி விமானத்தில் இன்று காலை டில்லி வந்தார்.
யாருக்கும் இல்லாத வகையில்
சிபிஐ அலுவலகத்துக்கு வந்த அவருக்கு, யாருக்கும் இல்லாத வகையில், விவிஐபி ட்ரீட்மென்ட் அளிக்கப்பட்டது. அவரது கார், போர்டிகோ வரை நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் யாரும் அவரை படம் பிடிக்க முடியாத வகையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிபிஐ அலுவலகத்தில் இருந்து இரண்டு வீதிகளுக்கு முன்னதாகவே, கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டு அனைவரும் நிறுத்தப்பட்டனர். இதனால் விஜய் சென்ற காரை மட்டுமே பத்திரிகையாளர்கள் படம் பிடிக்க முடிந்தது.
ஏன் இந்த ஏற்பாடு
சினிமா நடிகர் என்பதால் கூட்டம் பெருமளவில் கூடி விடும் என்று கருதி இத்தகைய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதா, அல்லது ஆளும் கட்சியினரின் தயவால் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என கேள்விகளை எழுப்பும் வகையில் நடக்கும் நிகழ்வுகள் இருந்தன.
விஜய் உடன் அவரது வக்கீல் மகேந்திரன் என்பவர் உடன் வந்திருந்தார். விசாரணையில் இருந்த விஜய்க்கு மதியம் 1.30 மணிக்கெல்லாம், உணவு கொண்டு செல்லப்பட்டு விட்டது. காலை 11:30 மணிக்கு விசாரணைக்கு சென்ற விஜய், மாலை 6 மணிக்கு வெளியில் வந்தார். ஏழு மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்து, விஜய், அவரது கட்சி நிர்வாகிகள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஒரே காரில் வெளியில் வந்தனர். டில்லி நட்சத்திர ஹோட்டலில் விஜய் இன்றிரவு தங்குகிறார்.
நாளையும் விசாரணை நடத்த சிபிஐ தயாராக இருந்ததாகவும், விஜய் கோரிக்கையை ஏற்று அது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, விஜய்க்கு அளிக்கப்பட்ட சிறப்பு முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
டிஜிபியிடம் விசாரணை
விஜய் விசாரிக்கப்பட்ட அதே டில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்தபோது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அவர் இருந்தார். கூட்டத்துக்கு அனுமதி வழங்கியதிலும், இடத்தை தேர்வு செய்வதிலும் போலீசார் தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறி பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

