ADDED : மார் 16, 2024 11:58 PM
புதுடில்லி : யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், தற்போது ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.  வரும் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்றும், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று வெளியான அறிவிப்பில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, சமீபத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு சென்றோம். பாதுகாப்பு காரணங்களுக்காக, அங்கு லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை நடத்துவது என்பது சாத்தியமற்றது.
எனினும், லோக்சபா தேர்தலுக்கு பின், ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்துவதில் தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள அனைத்து கட்சிகளும், லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என, தெரிவித்தன. எனினும் இது சாத்தியமற்றது.  ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 10 - 12 வேட்பாளர்கள் இருப்பர். அதன்படி, 1,000 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடுவர். இவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பது சாத்தியமற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜம்மு - காஷ்மீரில், 2024 செப்., 30க்குள் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என, கடந்த ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

