டில்லியில் அனைத்து கட்சி கூட்டம்: காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி
டில்லியில் அனைத்து கட்சி கூட்டம்: காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி
UPDATED : ஏப் 24, 2025 09:51 PM
ADDED : ஏப் 24, 2025 06:43 PM

புதுடில்லி: காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆலோசிக்க டில்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் தொடர்பாக, விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ராஜ்யசபா அல்லது லோக்சபாவில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பி.,க்களை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த கூட்டம் டில்லியில் துவங்கியது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், ஜேபி நட்டா நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல், திமுக எம்.பி., திருச்சி சிவா, சமாஜ்வாதி, திரிணமுல், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் காஷ்மீர் தாக்குதல் மற்றும் அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் துவங்கியம், தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் கிரண் ரஜிஜூ கூறியதாவது:பஹல்காமில் நடந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கமளித்தார். இந்த சம்பவம் சோகமானது. ஒட்டு மொத்த நாட்டு மக்களும் கவலை கொண்டுள்ள நிலையில், அதனை மனதில் வைத்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டோம். தாக்குதல் எப்படி நடந்தது. பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த தகவல்களை உளவுத்துறையினர் விளக்கி கூறினர். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து உள்ளன. அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஆதரவு அளிப்போம் என எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்ட குரலில் தெரிவித்துள்ளன என்றார்.