ADDED : அக் 21, 2024 01:04 AM

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, 54, சர்வதேச மாரத்தான் போட்டியை ஸ்ரீநகரில் துவக்கி வைத்து, 21 கி.மீ., துாரத்தை இரண்டு மணி நேரத்தில் ஓடி கடந்தார்.
ஜம்மு - காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, சர்வதேச சுற்றுலா பயணியரை கவர்வதற்காக, மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலைமை மற்றும் வளர்ச்சி பணிகளை எடுத்துக்காட்டும் வகையில் சர்வதேச மாரத்தான் போட்டியை நேற்று காஷ்மீர் சுற்றுலாத் துறை நடத்தியது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக, 13 நாடுகளைச் சேர்ந்த 59 மாரத்தான் வீரர்கள், 35 உள்ளூர் வீரர்கள் மற்றும் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று காலை 6:00 மணிக்கு போட்டியை துவக்கி வைத்தார்.
மொத்தம் 42 கி.மீ., துார முழு மாரத்தான் பந்தயத்தில், சர்வதேச மற்றும் உள்ளூர் மாரத்தான் வீரர்கள் ஓடினர்.
இதில், எந்தவித பயிற்சியும் இல்லாமல் பங்கேற்ற முதல்வர் ஒமர் அப்துல்லா, பாதி மாரத்தான் எனப்படும் 21 கி.மீ., துாரத்தை இரண்டு மணி நேரத்தில் ஓடி கடந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஓட்டப்பந்தய வீரர்களை ஊக்குவிக்க ஸ்ரீநகர் மக்கள் ஆர்வமுடன் வந்ததற்கு நன்றி.
''காஷ்மீர் சர்வதேச மாரத்தான் உலகின் தலைசிறந்த நிகழ்வுகளில் ஒன்றாக மாறும் என்று நம்புகிறேன்,” என்றார்.

