காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு நீதித்துறை கமிஷன் முன் கே.சி.ஆர்., ஆஜர்
காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு நீதித்துறை கமிஷன் முன் கே.சி.ஆர்., ஆஜர்
ADDED : ஜூன் 12, 2025 04:58 AM
ஹைதராபாத்: தெலுங்கானாவில், காலேஸ்வரம் நீர்பாசனத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரை விசாரிக்கும், நீதித்துறை கமிஷன் முன் பி.ஆர்.எஸ்., எனப்படும், பாரத் ராஷ்டிர சமிதி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
தெலுங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் இருந்தபோது, காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு, 2016ல் அடிக்கல் நாட்டினார். 25,000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை செலவானது.
தெலுங்கானாவில், ஜெய்சங்கர் பூபல்லி மாவட்டத்தில் மெடிகட்டா என்ற இடத்தில், கோதாவரி நதியுடன் மூன்று துணை நதிகள் இணையும் இடத்தில், பிரமாண்ட அணை கட்டி, மாநிலத்தின், 70 சதவீத பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
கோதாவரியில் அணை அமைந்துள்ள மெடிகட்டா பகுதி, கடல் மட்டத்தில் இருந்து, 302 அடி உயரத்தில் உள்ளது. அதாவது, கீழிருந்து மேலாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இத்திட்டம் போல உலகில் வேறு எங்கும் இல்லை என பாராட்டப்பட்ட நிலையில், 2023ல் அணையில் ஐந்து துாண்கள் சரிந்து, நான்கு அடிக்கு கீழே இறங்கியது. இதனால் அணை கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்., ஆட்சிக்கு வந்தபின், நீதித்துறை கமிஷன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சி.கோஷ் விசாரிக்கிறார்.
சந்திரசேகர ராவின் மருமகனும், பி.ஆர்.எஸ்., ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ் மற்றும் நிதியமைச்சராக இருந்து தற்போது பா.ஜ., லோக்சபா எம்.பி.,யாக உள்ள ஈடலா ராஜேந்தர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்தது.
இந்நிலையில், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், நீதித்துறை கமிஷன் முன் ஆஜராகி நேற்று விளக்கம் அளித்தார்.

