அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கீழடி! சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக அறிவிப்பு
அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கீழடி! சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக அறிவிப்பு
ADDED : செப் 28, 2024 05:12 PM

சென்னை: மத்திய அரசின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
கலாசாரம், இயற்கை வளங்களை பாதுகாத்து மேம்படுத்தும் கிராமங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த சுற்றுலா கிராம விருதுகள் கடந்தாண்டு முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2024ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 991 விண்ணப்பங்கள் இதற்காக தருவிக்கப்பட்டு இருந்தன.
8 பிரிவுகளின் கீழ் சிறந்த சுற்றுலா கிராமங்கள் என 36 கிராமங்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த கீழடி, பாரம்பரிய பிரிவின் கீழ் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிகம், ஆரோக்கியம் என்ற பிரிவின் கீழ் தமிழகத்தில் உள்ள மேல்காலிங்கம்பட்டி சிறந்த சுற்றுலா கிராமமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விவரத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது;
உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கும் கீழடியில், மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், ரூ.18.8 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்தை உள்ளம் குளிர கண்டு களிக்கின்றனர். மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் 'சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.