போதைக்கு எதிரான போருக்கு ஆதரவு இளைஞர்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்
போதைக்கு எதிரான போருக்கு ஆதரவு இளைஞர்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்
ADDED : ஏப் 02, 2025 11:07 PM
லூதியானா:“போதைப்பொருளுக்கு எதிராக பஞ்சாப் அரசு நடத்தும் போரை, இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும்,”என, ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இந்தப் பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்த அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்பதில் இளைஞர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. போதைப் பொருட்கள் அழிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிகப்பெரிய தீமை நிறைந்த சக்தியாக மாறும். அதனால், இளைய தலைமுறையின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
பஞ்சாப் மாநிலத்தின் எதிர்காலம் இளைஞர்கள் கைகளில் தான் உள்ளது. உங்களில் பஞ்சாபின் வருங்கால முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொழிலதிபர் இருக்கிறீர்கள். புதிய பஞ்சாபை உருவாக்க வேண்டியது இளைஞர்களாகிய நீங்கள்தான்.
போதைப் பொருளுக்கு எதிராக பஞ்சாப் அரசு நடத்தும் போரை இளைஞர்கள் மனமுவந்து ஆதரிக்க வேண்டும்.
பஞ்சாப் மாநிலத்தில் இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள், சட்டவிரோத பணத்துக்காக போதைப்பொருள் கும்பல்களுக்கு ஆதரவு அளித்து விட்டனர். அதனால், ஒரு தலைமுறையே நாசம் அடைந்து விட்டது. பணத்துக்கு விலைபோன தலைவர்கள் தங்கள் தவறுகளுக்காக நிச்சயம் தண்டிக்கப்படுவர்.
பஞ்சாபில் கடந்த 30 நாட்களில், போதைப்பொருள் விற்று சம்பாதித்த பணத்தால் கட்டப்பட்ட கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
போதைப் பழக்கத்துக்கு அடிமையானவரை மீட்க, மாநில அரசு போதைப்பொருள் ஒழிப்பு மையங்களை அமைத்து வருகிறது. உங்கள் நண்பரோ, குடும்பத்தினரோ போதைப் பொருள் உட்கொண்டால் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவருக்கு சிகிச்சை அளித்து மீட்கப்படுவார். தகவல் தருவோர் குறித்த விபரம் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டுகளில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங், டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட பலர் பங்கேற்றனர்.

