அவங்க ஆட்சிக்கு வந்தால் எந்த சேவையும் கிடைக்காது; கெஜ்ரிவால் பிரசாரம்!
அவங்க ஆட்சிக்கு வந்தால் எந்த சேவையும் கிடைக்காது; கெஜ்ரிவால் பிரசாரம்!
ADDED : டிச 08, 2024 08:19 AM

புதுடில்லி: 'ஆம் ஆத்மி அரசின் முன்னேற்றத்தை சீர்குலைக்க பா.ஜ., மீண்டும், மீண்டும் சதி செய்து வருகிறது. மக்கள் புத்திசாலித்தனமாக ஓட்டளிக்க வேண்டும். ' என டில்லி முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
டில்லி சட்டசபைக்கு அடுத்த இரு மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் 'ஹாட்ரிக்' வெற்றிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி முயற்சிப்பதால், அங்கு கடும் பனிப்பொழிவின் நடுவே அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.,வின் தேர்தல் பிரசார முழக்கத்தை கெஜ்ரிவால் கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அவர்கள் ஆட்சிக்கு ஒட்டளித்தால், டில்லி மக்களுக்காக ஆம் ஆத்மி அரசு, கடந்த பத்து ஆண்டுகளாக செய்த அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அனைத்தையும் மாற்றுவோம் என்று தேர்தல் பிரசார முழக்கம் வாயிலாக பா.ஜ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெண்களுக்கான இலவச பஸ் பயணம் முடிவுக்கு வரும். அரசு பள்ளிகள் மீண்டும் புறக்கணிக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்துகள் மற்றும் சிகிச்சை நிறுத்தப்படும். அவர்கள் தவறுதலாக ஆட்சிக்கு வந்தால், டில்லி மக்களுக்கு ஆம் ஆத்மி அரசு வழங்கும் அனைத்து இலவச சேவைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
டில்லி மக்கள் புத்திசாலித்தனமாக ஓட்டளிக்க வேண்டும். நாங்கள் வழங்கிய வசதிகள் தொடர்வதை உறுதிசெய்ய, மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.