பிறந்த மாநிலத்தை இழிவுபடுத்தும் கெஜ்ரிவால் ஹரியானா முதல்வர் பாய்ச்சல்!
பிறந்த மாநிலத்தை இழிவுபடுத்தும் கெஜ்ரிவால் ஹரியானா முதல்வர் பாய்ச்சல்!
ADDED : பிப் 01, 2025 10:02 PM
புதுடில்லி:“டில்லிக்கு வழங்கப்படும் யமுனை நதி நீரில் ஹரியானா பா.ஜ., அரசு கழிவுகளைக் கலப்பதாக பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பிறந்த மாநிலத்தை இழிவுபடுத்தி விட்டார்,”என, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பேசினார்.
திமர்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் சூர்ய பிரகாஷ் காத்ரியை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பேசியதாவது:
யமுனை நதியை சுத்தம் செய்வதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கெஜ்ரிவால் தவறி விட்டார். ஆனால், ஹரியானாவில் தொழிற்சாலைக் கழிவுகளை யமுனை நதி நீரில் கலப்பதாக பொய்யான குற்றச்சாட்டை அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதன் வாயிலாக தான் பிறந்து வளர்ந்த மாநிலமான ஹரியானா அவர் இழிவுபடுத்தி விட்டார். கடந்த இரண்டு தேர்தல்களில் டில்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய கெஜ்ரிவால், தன் தோல்வியை மறைக்க மலிவான அரசியல் செய்து வருகிறார்.
யமுனை நதியில் டில்லிக்கு சுத்தமான நீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் டில்லி அரசின் தவறான நிர்வாகத்தால், யமுனை நீர் மாசுபடுத்தப்படுகிறது. இதனால் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலின் வஞ்சகத்தை, அவருடைய குணத்தையும் டில்லி மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். இந்த தேர்தலில் டில்லி வாக்காளர்கள் அவரை முற்றிலும் நிராகரிப்பர்.
வடிகால், குளங்களை தூர்வாறும் பணிகள், கழிவுநீர் கால்வாயை சீரமைத்தல் ஆகியவற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி 8,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். ஆனால், அந்தப் பணிகள் செய்யப்படவில்லை. மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவது முதல்வரின் பொறுப்பு. ஆனால், டில்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால் அதை நிறைவேற்றவில்லை.
பள்ளிகளை மேம்படுத்துவது, சுத்தமான குடிநீர் வழங்குவது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் தவறி விட்டார்.
கெஜ்ரிவாலுக்கு சவால்
முன்னதாக, ஹரியானா மற்றும் டில்லி ஆகிய இரு மாநிலங்களிலிருந்தும் யமுனை நதி நீர் மாதிரிகளுடன் வஜிராபாத்தில் நிருபர்களை சந்தித்த ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கூறியதாவது:
ஹரியானா மற்றும் டில்லி ஆகிய இரண்டு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட யமுனை நதி நீரில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. ஹரியானா- - டில்லி எல்லையில் பல்லா காட்டில் யமுனை நதி நீரை நான் குடித்தேன். அதுவே, டில்லி வஜிராபாத்தில் இருந்து எடுக்கப்பட்ட நீரை குடிக்க முடியாது. யமுனையை சுத்தம் செய்வதாக பேசியே 10 ஆண்டுகளைக் கடத்தி விட்ட கெஜ்ரிவால், அரசியல் ஆதாயத்துக்காக ஹரியானா மீது குற்றம் சாட்டுகிறார். டில்லியில் உள்ள பெரும்பாலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படவில்லை. எனவே, டில்லியின் கழிவுநீர் நேரடியாக யமுனையில் விடப்படுகிறது. வஜிராபாத்தில் உள்ள யமுனா நீரை கெஜ்ரிவால் குடித்துக் காட்டுவாரா?
இவ்வாறு அவர் கூறினார்.