ADDED : செப் 16, 2024 06:26 PM

புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (செப்.17) முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், மாலை துணை நிலை கவர்னரிடம் கடிதம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. டில்லியில், 2021 - 2022ம் ஆண்டுக்கான மதுபான கொள்கை திருத்தப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து, அந்த கொள்கை கைவிடப்பட்டது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
இதே வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச்சில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார்.
ஜாமின் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சமீபத்தில் கெஜ்ரிவால் 'முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக் கூடாது. துணை நிலை கவர்னர் ஒப்புதல் தேவைப்படாத ஆவணங்களில் கையெழுத்திடக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக நேற்று திடீரென அறிவிப்பு வெளியிட்டார்.
இதை தொடர்ந்து இன்று வெளியான அறிவிப்பில், முதல்வர் பதவியை கெஜ்ரிவால் நாளை (செப்.17) ராஜினாமா செய்ய உள்ளார். அன்று காலை 11 மணிக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கெஜ்ரிவால் தலைமையில் நடக்கிறது. இதில் முதல்வர் யார் என அறிவிக்கப்பட உள்ளது. பின்னர் 4:30 மணியளவில் துணை நிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குகிறார். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.