நாளை சரண் அடைகிறார் கெஜ்ரிவால்: பெற்றோர் நிலை குறித்து கவலை
நாளை சரண் அடைகிறார் கெஜ்ரிவால்: பெற்றோர் நிலை குறித்து கவலை
ADDED : ஜூன் 01, 2024 04:12 AM

புதுடில்லி : திஹார் சிறையில் நாளை(ஜூன் 2) சரணடைய இருப்பதாக தெரிவித்துள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால், தன் பெற்றோரை பார்த்துக் கொள்ளும்படி டில்லி மக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த முதல்வர் கெஜ்ரிவால், டில்லி, பஞ்சாப், உ.பி., ம.பி., ஆகிய மாநிலங்களில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொண்டார்.
உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமின் இன்றுடன் நிறைவடைகிறது. மீண்டும் அவர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாளை சிறைக்கு செல்ல உள்ளார்.
இது தொடர்பாக, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திஹார் சிறையில், ஜூன் 2ம் தேதி, மாலை 3:00 மணிக்கு சரணடைய உள்ளேன். இந்த முறை, அங்கு எவ்வளவு நாள் இருப்பேன் என எனக்கு தெரியாது. சர்வாதிகாரியிடம் இருந்து நம் நாட்டை காக்க சிறை செல்ல உள்ளேன் என்பதில், நான் பெருமை கொள்கிறேன்.
என்னை, அவர்கள் அடக்க நினைக்கின்றனர். சிறையில் இருந்தபோது, எனக்கு உரிய மருந்துகள் அளிக்கவில்லை. உடல் எடையும், 6 கிலோ வரை குறைந்தது. வெளியே வந்த பின்பும், அது அதிகரிக்கவில்லை. இதனால், என் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறையில் என்னை கொடுமைப்படுத்தினாலும், ஆட்சியாளர்களுக்கு தலை வணங்க மாட்டேன். நான் சிறைக்கு சென்றால், டில்லி மக்களின் நிலையை எண்ணி வருந்துகிறேன். எனினும், மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.
நான் சிறைக்கு சென்றால், என் வயதான பெற்றோரை பார்த்து கொள்ளவும். அவர்கள் நல்ல உடல்நலனுடன் இருக்கவும் இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள். இதேபோல், என் வாழ்வின் கடினமான காலக்கட்டங்களில் எனக்கு உறுதுணையாக இருப்பது என் மனைவி சுனிதா தான்.
அவருக்கு என் குடும்பத்தாரும், மக்களும் உறுதுணையாக உள்ளனர். உங்களின் ஆசிர்வாதத்தால், நான் நலமுடன் இருப்பேன். கடவுள் விரும்பினால், விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

