கட்டப்பனை- கம்பம் சுரங்கப்பாதை ஆய்வுக்கு கேரளா ரூ.10 கோடி ஒதுக்கீடு
கட்டப்பனை- கம்பம் சுரங்கப்பாதை ஆய்வுக்கு கேரளா ரூ.10 கோடி ஒதுக்கீடு
UPDATED : ஜன 31, 2026 02:22 PM
ADDED : ஜன 31, 2026 05:32 AM

கம்பம்: கேரள மாநிலம் கட்டப்பனையில் இருந்து தேனி மாவட்டம் கம்பத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்காக ஆய்வு செய்ய, கேரள அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முக்கிய நகரமான கட்டப்பனைக்கு தமிழகத்தில் இருந்து அதிக மக்கள் சென்று வருகின்றனர். அங்கிருந்தும் கம்பம் வருகின்றனர். கம்பத்தில் இருந்து கட்டப்பனை செல்ல, 40 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டும். கம்பமெட்டு ரோட்டில், 7 கி.மீ., துாரம் செங்குத்தான 20 வளைவுகளை கொண்ட மலைப்பாதையை கடக்க வேண்டும். அதன்பின் புளியன்மலையில் இருந்து கட்டப்பனை செல்ல செங்குத்தான பல வளைவுகளில் கீழ் நோக்கி இறங்க வேண்டும்.
இந்த ஆபத்தான பயணத்தை தவிர்க்கவும், சபரிமலை சீசனில் பக்தர்கள் எளிதாக கட்டப்பனையை அடைந்து, கோவிலுக்கு செல்லவும் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கேரள அரசு செயல்படுத்துகிறது. கட்டப்பனை அருகில் உள்ள பாரக்கடவு என்ற இடத்திலிருந்து சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
கட்டப்பனை கடல் மட்டத்தில் இருந்து 870 மீ., உயரத்திலும், கம்பம் கடல் மட்டத்தில் இருந்து 490 மீ., அமைந்திருப்பதால் அதிக சாத்தியக்கூறு உள்ளது. இந்த சுரங்கப்பாதை அமைந்தால், 40 கி.மீ., துார பயணம் 12 கி.மீ., ஆக குறையும். இந்த திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கேரள அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
பயண நேரம், துாரம், ஆபத்து குறைவு என பல வழிகளில் சுரங்கப்பாதை பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த அறிவிப்பை அப்பகுதி விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

