பி.எம்., ஸ்ரீ திட்டத்தை நிறுத்தினாலும் நிதி பெறும் முயற்சி தொடரும்: கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி உறுதி
பி.எம்., ஸ்ரீ திட்டத்தை நிறுத்தினாலும் நிதி பெறும் முயற்சி தொடரும்: கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி உறுதி
ADDED : நவ 02, 2025 11:24 PM

திருவனந்தபுரம்: “பி.எம்., ஸ்ரீ பள்ளி திட்டத்தை கேரளாவில் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தாலும், மத்திய அரசிடம் இருந்து சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியைப் பெறும் முயற்சி தொடரும்,” என கேரள மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி கூறினார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு பி.எம்., ஸ்ரீ எனப் படும் முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமர் பள்ளிகள் திட்டத்தை நீண்ட இழுபறிக்கு பின் செயல்படுத்த முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்தார்.
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வசதியாக இந்த திட்டம் செயல்படுவதால், கேரள அரசில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய கல்வி அமைச்சர் சிவன்குட்டி தலைமையில் ஏழு பேர் அடங்கிய குழுவை முதல்வர் பினராயி விஜயன் அமைத்தார். இந்த குழு அறிக்கை அளிக்கும் வரை பி.எம்., ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படாது என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
எனக்கு தனிப்பட்ட முறையில் பி.எம்., ஸ்ரீ திட்டம் மீது எந்தவித மகிழ்ச்சியோ அல்லது அதிருப்தியோ இல்லை. இடது ஜனநாயக முன்னணியின் கொள்கையை பின்பற்றுவதே எங்கள் நோக்கம்.
திட்ட நடைமுறைப்படுத்தலை ஆய்வு செய்ய அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் கூட்டம் இன்னும் நடைபெறவில்லை. கூட்டத்துக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்போம்.
அதே சமயம் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதி பெறும் முயற்சி தொடரும். இது தொடர்பாக சமீபத்தில் நடந்த மத்திய - மாநில அதிகாரிகள் அளவிலான கூட்டத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
வரும் 10ம் தேதி டில்லி செல்கிறேன். அங்கு மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து கேரளாவுக்கு நிதி வழங்க வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

