ADDED : நவ 02, 2025 11:23 PM
மூணாறு: கேரள மாநிலம் மூணாறு ஊராட்சியில் நிதியை முறையாக பயன்படுத்தாமல் முறைகேட்டிற்கு முயற்சி செய்ததாக இளநிலை கண்காணிப்பாளர் அபிலாைஷ 'சஸ்பெண்ட்' செய்து ஊராட்சித் தலைவர் மணிமொழி உத்தரவிட்டார்.
கேரளாவில் அரசு செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து வரும் காலங்களில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஊராட்சிகள் தோறும் வளர்ச்சி கூட்டங்கள் நடத்தப்பட்டன.
மூணாறு ஊராட்சியில் அக்.,18ல் வளர்ச்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ரூ.1.55 லட்சம், ரூ.1.98 லட்சம் செலவிட்டதாக 2 பில் விபரங்கள் அடங்கிய அறிக்கையை இளநிலை கண்காணிப்பாளர் அபிலாஷ் கூட்டத்தில் தாக்கல் செய்தார். அத்தொகை தொடர்பாக விவாதம் எழுந்தது. விசாரணையில் ஊராட்சி தலைவர் அனுமதியுடன் பில்கள் தாக்கல் செய்யப் பட்டதாக அபிலாஷ் தெரிவித்தார்.
ஆனால் ஊராட்சி நிர்வாகக் குழு, தலைவர் ஆகியோரின் அனுமதி இன்றி பில் தாக்கல் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் நிதியை முறையாக பயன்படுத்தாமல் முறைகேடு செய்ய முயற்சி செய்ததாகக் கூறி அபிலாஷை பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்து ஊராட்சித்தலைவர் மணிமொழி உத்தரவிட்டார்.

