மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு... தோல்வி! விரிவான அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு... தோல்வி! விரிவான அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : டிச 24, 2024 03:51 AM
திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிவந்து திருநெல்வேலியில் கொட்டி சென்ற விவகாரத்தை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்துள்ளதாக விமர்சித்துள்ளது. அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள், திடக்கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகளை லாரிகளில் ஏற்றிவந்து, கேரள - தமிழக எல்லையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் கொட்டிச் செல்வது தொடர்கதையாக உள்ளது.
இதை கண்டித்து, உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த விவகாரம் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், கேரள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த சில லாரிகள், திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லுார், கோடகநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் கொட்டிவிட்டு சென்றன.
இது தொடர்பான புகாரை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை டிச., 23க்குள் திரும்ப அள்ளிச் செல்லும்படியும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
கழிவுகளை மீண்டும் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட கெடு, நேற்றுடன் முடிந்த நிலையில், கேரள அதிகாரிகள் அடங்கிய குழு, கழிவுகளை எடுக்க எட்டு லாரிகளுடன் திருநெல்வேலி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இது தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், பி.கோபிநாத் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கேரளாவில் உள்ள மருத்துவக் கழிவுகளை சட்டவிதிகளுக்கு முரணனான அண்டை மாநிலத்தில் கொட்டியது மிகவும் அபாயகரமான போக்கு. இது கண்டனத்துக்குரிய செயல். மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்து விட்டது.
கழிவுகளை கையாளுவதற்கான நடைமுறைகளை வகுக்க ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். அதோடு, இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.