கேரள மாநில அரசின் மக்கள் கருத்து கேட்பு திட்டம் ரத்து! அரசு பணத்தை தவறாக பயன்படுத்துவதாக கோர்ட் கண்டனம்
கேரள மாநில அரசின் மக்கள் கருத்து கேட்பு திட்டம் ரத்து! அரசு பணத்தை தவறாக பயன்படுத்துவதாக கோர்ட் கண்டனம்
ADDED : பிப் 18, 2026 01:05 AM

கொச்சி: தமிழகத்தில், தி.மு.க., அரசின், 'உங்க கனவை சொல்லுங்க' என்ற திட்டத்தை போலவே, கேரளாவில், 'நவ கேரளா குடிமக்கள் பதிலளிப்பு திட்டம்' என்ற பெயரில், அரசு சார்பில், மக்களிடையே நடத்தப்பட்டு வந்த கருத்து கேட்பு திட்டத்தை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 'இது நிர்வாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய செயல். சட்ட விதிகளை மீறிய நடவடிக்கை' என, கடுமையுடன் குறிப்பிட்டது.
கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 140 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரலில் தமிழகத்துடன் சேர்த்து தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில், ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 'நவ கேரளா குடிமக்கள் பதிலளிப்பு' என்ற திட்டத்தை, கடந்த ஜன., 1ல் கேரள அரசு துவங்கியது.
குற்றச்சாட்டு
வரும் 28 வரை, வீடு வீடாகச் சென்று மக்களின் குறைகள், தேவைகள், மாநிலத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் குறித்து கேட்பதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்துக்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கி கேரள அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழகத்தில் ஆளும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, இதே பாணியில், 'உங்க கனவை சொல்லுங்க' என்ற பெயரில் மக்களிடையே கருத்துக்களை கேட்டு வருகிறது.
கேரள அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசு இயந்திரத்தை ஆளுங்கட்சி தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டின.
இத்திட்டத்தை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் கொச்சியைச் சேர்ந்த முபாஸ் எம்.எச் மற்றும் கேரள மாணவர் சங்க தலைவர் அலோஷியஸ் சேவியர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதில், அரசியல் லாபத்திற்காக அரசு பணத்தை ஆளுங்கட்சி தவறாக பயன்படுத்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த மனுக்களை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சவுமென் சென், நீதிபதி ஷியாம் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:
பட்ஜெட்டில் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், நிதி பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட விதிகள் மிக எளிதாக மீறப்படுகின்றன.
'நவ கேரளா குடிமக்கள் பதிலளிப்பு திட்டம்' குறித்து மாநில அமைச்சரவை முடிவெடுக்கும் முன்பே, அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் இணையும்படி, கட்சித் தொண்டர்களுக்கு மார்க்.கம்யூ., மாநில செயலர் எம்.வி.கோவிந்தன் கடிதம் எழுதியது எப்படி?
பொதுமக்களுக்கு போதிய விளம்பரம் தராமல், கட்சி தொண்டர்களுக்கு மட்டும் தகவல்களை கசியவிட்டு, இணையதளத்தில் அவர்களை ஆதிக்கம் செலுத்த வைக்க அரசு முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசு இயந்திரத்தையும், பணத்தையும் பயன்படுத்தி இவ்வளவு பெரிய கருத்துக் கேட்பை நடத்துவது, ஒரு கட்சியின் அரசியல் பிரசாரம் போலவே உள்ளது.
பின்னடைவு
திட்டமிடல் மற்றும் பொருளாதாரத் துறை செய்ய வேண்டிய வேலையை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்கு மாற்றி, 20 கோடி ரூபாய் ஒதுக்கியது விதிகளுக்கு புறம்பானது. எனவே, இந்த மக்கள் கருத்துக் கேட்பு திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இது, நிர்வாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய செயல் மற்றும் சட்ட விதிகளை மீறிய நடவடிக்கை.
அமைச்சரவை எடுக்கும் நிதி தொடர்பான முடிவுகள் சட்டசபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல், சட்டசபை ஒப்புதல் அளிக்கும் என, அமைச்சரவை தானாகவே முடிவு செய்ய முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

