சிறுமியின் கருக்கலைப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி
சிறுமியின் கருக்கலைப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி
UPDATED : நவ 10, 2024 06:14 AM
ADDED : நவ 10, 2024 12:08 AM

கொச்சி: கேரளாவில், காதலனால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி கருவுற்ற, 16 வயது சிறுமியின் கருவை கலைக்க, அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுமி, தன் காதலனால் பல முறை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். அவர் கருவுற்று 26 வாரங்களுக்கு மேலான நிலையில் அது பற்றி அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
எனவே, கருகலைப்புக்கு அனுமதிகோரி சிறுமியின் தாய், கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியில் பிரச்னை எதுவும் இல்லை' எனக்கூறி கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்க மறுத்தார்.
இதை எதிர்த்து சிறுமியின் தாய் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
சிறுமி குழந்தையை பிரசவித்தால், அவரது மனநலம் கடுமையாக பாதிக்கப்படும் என, மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. கருக்கலைப்புக்கு அனுமதி மறுத்த தனி நீதிபதி, சிறுமியின் மனநலனை பரிசோதிக்க பரிந்துரைக்கவில்லை. அது துரதிர்ஷ்டவசமானது.
சிறுமியின் மனநலனை கருத்தில் வைத்து கருகலைப்புக்கு அனுமதி அளிக்கிறோம்.
கருகலைப்பின் போது சிசு உயிருடன் பிறந்தால் அதன் உயிரை காக்க வேண்டிய பொறுப்பு மருத்துவக் குழுவுக்கு உள்ளது.
குழந்தையை வளர்க்க சிறுமியின் குடும்பத்தினர் விரும்பவில்லை எனில், குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நம் நாட்டில், 24 வாரங்கள் வரை கருவை கலைக்க அனுமதி உண்டு. அதற்கு மேற்பட்ட காலமான கரு என்றால், அதை கலைப்பது குறித்து வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் சட்டப்பூர்வமான அனுமதி பெற வேண்டும்.

