ADDED : ஏப் 18, 2025 04:38 AM

புதுடில்லி : முஸ்லிம் மதத்தில் இருந்து வெளியேறாமல், இந்திய வாரிசுரிமை சட்டத்தின்கீழ் பரம்பரை சொத்தில் உரிமை கோருவதற்கு அனுமதி கேட்டு, கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்திய வாரிசுரிமை சட்டத்தின், 58வது பிரிவின்படி, இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு பொருந்தாது. குடும்ப சொத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாக, ஷரியத் சட்டத்தின் கீழ், முஸ்லிம்கள் நிவாரணம் பெற முடியும்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த நவ்ஷத் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 'முஸ்லிம் மதத்தில் இருந்து வெளியேறாமல், குடும்ப சொத்துக்களில் உரிமை கோர, ஷரியத் சட்டத்தில் அல்லாமல், வாரிசுரிமை சட்டத்தின் கீழ் அனுமதிக்க வேண்டும்' என, மனுவில் அவர் கூறியுள்ளார்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வில் இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் கேரள அரசுக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான மற்ற வழக்குகளுடன் இந்த மனுவையும் இணைக்க அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சுபியா என்ற முஸ்லிம் பெண், கடந்தாண்டு ஏப்ரலில் இதே கோரிக்கையை முன்வைத்து மனு தாக்கல் செய்துள்ளார். முஸ்லிம் மதத்தை பின்பற்றாததால், வாரிசுரிமை சட்டத்தின் கீழ் நிவாரணம் பெற அனுமதிக்க வேண்டும் என, மனுவில் அவர் கோரியிருந்தார்.
இதுபோல, வாரிசுரிமை சட்டத்தின், 58வது பிரிவின்படி, முஸ்லிம்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்பதை எதிர்த்து, குரான் சுன்னத் சொசைட்டி சார்பிலும், 2016ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

