கேரள பாதிரியாருக்கு கர்தினால் பதவி; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
கேரள பாதிரியாருக்கு கர்தினால் பதவி; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
ADDED : டிச 09, 2024 03:04 AM

புதுடில்லி: 'கேரளாவின் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட், 51, கர்தினாலாக நியமிக்கப்பட்டிருப்பது நம் நாட்டிற்கு பெருமை' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்கர்களின் தலைமை குருவாக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். இவருக்கு ஆலோசனை வழங்கவும், கத்தோலிக்க சமய முக்கிய முடிவுகள் எடுப்பதிலும் கர்தினால்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
போப் தேர்வில், ஓட்டு போடும் தகுதியும் கர்தினால்களுக்கு உள்ளது. பல்வேறு மறை மாவட்டத்திற்கு தலைமையாக கர்தினால் செயல்படுவார்.
உலகம் முழுதும் 100க்கும் மேற்பட்ட கர்தினால்களை தேர்ந்தெடுத்து, போப் பிரான்சிஸ் நியமிப்பார். இந்நிலையில், கர்தினால் பொறுப்புக்கு கேரளாவின் செங்கனாச்சேரியைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது பதவியேற்பு விழா, வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் நேற்று நடந்தது. அப்போது, ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட்டுக்கு, போப் பிரான்சிஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 புதிய கர்தினால்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடி சமூக வலை தளத்தில் கூறுகையில், 'புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினாலாக ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட்டை, போப் பிரான்சிஸ் நியமித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
'கர்தினாலாக நியமிக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட்டுக்கு என் வாழ்த்துகள். தங்களை தேர்வு செய்தது, இந்தியாவுக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. 'மனிதகுல சேவைக்காக தன்னை அர்ப்பணித் துள்ள ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட்டிற்கு என் வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.