மது அருந்துவதை படிப்படியாக குறைப்பதே அரசின் குறிக்கோள்! கேரள மாநில அமைச்சர் பேச்சு
மது அருந்துவதை படிப்படியாக குறைப்பதே அரசின் குறிக்கோள்! கேரள மாநில அமைச்சர் பேச்சு
ADDED : ஜூலை 08, 2025 12:10 AM

பாலக்காடு; கேரள அரசின் குறிக்கோள் மது அருந்துவதை ஊக்குவிப்பதல்ல, படிப்படியாக குறைப்பதாகும், என, மாநில கலால் துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மேனன்பாறை பகுதியில் இந்தியாவில் தயாரிக்கும் வெளிநாட்டு மதுபான உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் துவக்க விழா நடந்தது.
மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தலைமை வகித்தார். எம்.பி., ஸ்ரீகண்டன், எம்.எல்.ஏ., பிரபாகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பினுமோன், மலபார் டிஸ்டிலரீஸ் நிர்வாக இயக்குநர் ஹர்ஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலால் துறை அமைச்சர் ராஜேஷ் துவக்கி வைத்து பேசியதாவது:
அரசாங்கத்தின் குறிக்கோள் மது அருந்துவதை ஊக்குவிப்பதல்ல. படிப்படியாக குறைப்பதாகும். மதுவிலக்கு அமல்படுத்தப்படாததற்கு, மதுவுக்கான தேவை அதிகமாக இருப்பதே ஆகும். மதுவை தடுத்தால் பெரும் பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். இந்நிலையில், குறைவான போதை அளிக்கும் மதுவை அறிமுகப்படுத்தினால், மதுவிலக்கை படிப்படியாக அடையலாம்.
தற்போது துவங்கப்படும் ஆலை செயல்பட தொடங்கினால், ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் விற்பனையை ஈட்ட முடியும்.
மேலும், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.