இடுக்கி அணையை பார்க்க அனுமதி நீட்டிப்பு; கேரள நீர்வளத்துறை அமைச்சர் தகவல்
இடுக்கி அணையை பார்க்க அனுமதி நீட்டிப்பு; கேரள நீர்வளத்துறை அமைச்சர் தகவல்
ADDED : நவ 24, 2024 08:40 AM

மூணாறு : இடுக்கி அணையை பார்க்க 2025 மே 31 வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக நீர் வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார்.
கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும்.
மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பலத்த பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டது. ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின்போது மட்டும் சுற்றுலா பயணிகள் அணையை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
உத்தரவு
இந்நிலையில் அணையை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனைத்து நாட்களிலும் பார்க்க அனுமதி அளித்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டது. வாரத்தில் புதன் கிழமை தோறும் பராமரிப்பு பணிகள் நடக்கும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே அணையை காண 2025 மே 31 வரை அனுமதி நீடிக்கப்பட்டது. முற்றிலும் 'ஆன் லைன்' வாயிலாக நுழைவு டிக்கெட் வழங்கப்படுகிறது. எஞ்சிய டிக்கெட்டுகள் செருதோணி அணை நுழைவு பகுதியில் உள்ள ஹைடல் டூரிசம் கவுன்டரில் இருந்து பெறலாம். நுழைவு கட்டணம், பேட்டரி காரில் பயணிக்க என நபர் ஒன்றுக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இத்தகவலை நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார்.