ADDED : ஆக 03, 2025 11:40 PM

கண்ணுார்: கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் வசித்து வந்த பிரபல 2 ரூபாய் டாக்டர் ஏ.கே.ராய்ரு கோபால், 80 உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
கேரளாவின் கண்ணுாரில் வசித்து வந்த டாக்டர் ராய்ரு கோபால், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணம் பெற்று பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்.
இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களில் இருந்தும் சிகிச்சைக்காக அவரிடம் நிறைய பேர் வர துவங்கினர்.
கூட்டம் அதிகரித்ததால், ஆரம்பத்தில் காலை 4:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை என தினசரி தன் இல்லத்திலேயே கிளினிக் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
பின்னாளில், உடல்நலப் பிரச்னை ஏற்பட்டதால், பார்வை நேரம் காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை என மாற்றப்பட்டது.
எனினும் நோயாளிகளுக்கான கட்டணத்தை 2 ரூபாயில் இருந்து அவர் உயர்த்தவே இல்லை. மேலும், மருந்து வாங்க முடியாதவர்களுக்கு, இலவசமாகவே மருந்து, மாத்திரைகளை கொடுத்து வந்தார்.
இதனால், அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை '2 ரூபாய் டாக்டர்' என செல்லமாக அழைத்து வந்தனர். வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதித்ததால், கடந்த மே மாதம், டாக்டர் கோபால், தன் கிளினிக்கை மூடினார். இதனால், அப்பகுதியில் இருந்த ஏழை, எளிய மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
கண்ணுாரில் உள்ள தன் இல்லத்தில் மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்த டாக்டர் கோபால் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.
இதனால், கண்ணுார் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். டாக்டர் கோபாலின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.