ஹிமாச்சல் பஸ்கள் மீது பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
ஹிமாச்சல் பஸ்கள் மீது பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
ADDED : மார் 24, 2025 02:10 AM
சிம்லா : 'பஞ்சாபில் இரவு நேரங்களில் ஹிமாச்சல பிரதேச பஸ்களை நிறுத்தப் போவதில்லை' என அந்த மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தின் பல பஸ்கள் அடித்து நொறுக்கப்படுவதுடன், அந்த பஸ்களில் சீக்கிய தீவிரவாத ஆதரவு வாசகங்கள் எழுதப்படுவதால், இந்த முடிவுக்கு ஹிமாச்சல பிரதேச போக்குவரத்து கழகம் வந்துஉள்ளது.
இளைஞர்கள் எதிர்ப்பு
பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் முதல்வராக உள்ளார். அதன் அண்டை மாநிலமான ஹிமாச்சலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்விந்தர் சிங் சுகு, முதல்வராக உள்ளார்.
சில நாட்களுக்கு முன், பஞ்சாப் இளைஞர்கள் சிலர், இருசக்கர வாகனங்களில் ஹிமாச்சல் சென்றனர்.
அப்போது அவர்களிடம் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு, பஞ்சாப் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன்பின், பஞ்சாப் செல்லும் ஹிமாச்சல பிரதேச பஸ்கள் மீது ஆங்காங்கே கல் வீசி தாக்கப்பட்டன.
அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. குறிப்பாக, இரவு நேரத்தில் பஞ்சாபில் நிறுத்தப்படும் பஸ்கள் மீது பல நகரங்களில் தாக்குதல் நடந்தது.
பதிலடி
இந்நிலையில், ஹிமாச்சல பிரதேச அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ராஜ்குமார் பதக் நேற்று கூறியதாவது:
நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். தொடர்ந்து எங்கள் மாநில பஸ்கள், பஞ்சாபில் தாக்கப்படுகின்றன. அதை எதிர்க்கும் பஸ் ஊழியர்களும் தாக்குதலுக்கு ஆளாகினர்.
எனவே, நிலமை சீராகும்வரை பஞ்சாபில் இரவு நேரங்களில் எங்களது பஸ்களை நிறுத்தப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாபில் நிறுத்தப்படும் ஹிமாச்சல் அரசு பஸ்கள் மீது காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் ஒட்டப்படுவதற்கு பதிலடியாக, பாரத மாதா ஸ்டிக்கர்களை ஒட்ட, ஹிமாச்சல பிரதேச இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.