ADDED : நவ 11, 2026 06:02 PM
கொல்கட்டா: மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் இருந்து மும்பைக்கு இன்று (நவ.,11) காலை புறப்பட இருந்த, ‘ஏர் இந்தியா’ விமானத்தின் கழிப்பறை கண்ணாடியில் விமானத்தை கடத்த இருப்பதாக எழுதி இருந்ததால் பயணியர் வெளியேற்றப்பட்டனர்.
மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு, ‘ஏர் இந்தியா’ விமானம் இன்று காலை புறப்பட தயாராக இருந்தது. பயணியர் அனைவரும் விமானத்துக்குள் ஏறி அமர்ந்திருந்தனர்.
அப்போது விமான கழிப்பறை கண்ணாடியில், ‘இந்த விமானத்தை கடத்த உள்ளோம்’ என லிப்ஸ்டிக்கில் எழுதியிருந்ததை கண்டு விமான பணிப்பெண் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அறிந்த விமான கேப்டன் உடனடியாக விமான கடத்தல் எச்சரிக்கை குறியீட்டை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினார்.
இதை தொடர்ந்து விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து பயணியர் அனைவரையும் இறக்கி பஸ்சில் ஏற்றி அப்புறப்படுத்தினர். விமானத்தை தனியான இடத்துக்கு ஓட்டிச் சென்று ஆய்வு செய்தனர். சோதனையில் சந்தேகத்திற்கு உரிய எதுவும் சிக்கவில்லை.
விமானத்துக்குள் நுழைந்து கடத்தல் மிரட்டல் விடுத்தவர் யார் என விசாரிக்கின்றனர்.
