ADDED : ஜன 18, 2024 05:18 AM

உலகின் சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான இடங்களில், குடகு மாவட்டம் முக்கியமான இடமாகும். இங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கும் நோக்கில், கூட்டம், கூட்டமாக வருகின்றனர். மன நிறைவுடன் திரும்பிச் செல்கின்றனர்.
குடகு மாவட்டத்தை, சுற்றி வந்தால் மக்களை சுண்டி இழுக்கும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா தலங்கள் உள்ளன. ஆனால் இவை வளர்ச்சி அடையாததால், இலைமறைக்காய் போன்று வெளிச்சத்துக்கு வரவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில், தனியார் ஹோம் ஸ்டேக்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கோவில்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், சுற்றுலா தலங்களை ஹோம் ஸ்டே உரிமையாளர்கள் அறிமுகம் செய்கின்றனர். இந்த விஷயத்தில், ஹோம் ஸ்டே உரிமையாளர்கள் இடையே, பலத்த போட்டியே நடக்கிறது. சுற்றுலா பயணியரை ஈர்க்க புதுப்புது யுக்தியை கையாள்கின்றனர். காபி தோட்டங்களுக்கிடையே சுற்றுலா பயணியர் நடமாட வாய்ப்பளிக்கின்றனர். சாகச விளையாட்டுகள் ஏற்பாடு செய்கின்றனர். இவை தொலைதுாரத்தில் இருந்து வருவோரை குஷிப்படுத்துகிறது.
இதற்கு முன்பு சுற்றுலா வரும் மக்கள், பிடித்தமான இடங்களை பார்த்துவிட்டுச் செல்வர். ஆனால் இப்போது அப்படி அல்ல. ஹோம் ஸ்டேக்கள் மூலமாக, உணவு, தங்கும் இடம் கொடுத்து உபசரிப்பதால், சுற்றுலா பயணியருக்கு தங்களின் உறவினர் வீட்டில் தங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையில் சுற்றுலா பயணியரை, மேலும் மகிழ்விக்க கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. குடகுக்கு சென்றால் கண்ணாடி பாலத்தை பார்க்க மறுப்பதில்லை. கேரள தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலமாக, குடகில் ஆறேழு மாதங்களுக்கு முன்பு, இந்த பாலம் தனியார் சார்பில் கட்டப்பட்டது. இதன் மீது நடந்தபடி கீழே தெரியும் இயற்கை காட்சிகளை பார்ப்பது, புது அனுபவமாக இருக்கும்.
மடிகேரியில் இருந்து, 10 கி.மீ., தொலைவில், பாகமண்டலா சாலையில் உடோத் மொட்டே என்ற இடத்தில், வசந்த் காபி விவசாயியின் தோட்டம் உள்ளது. தன் தோட்டத்தில் ஹோம் ஸ்டேவும், கண்ணாடி பாலமும் கட்டியுள்ளார். பாலத்தின் மீது நின்று, காபி தோட்டம், வனப்பகுதிகளை கண்டு ரசிக்கலாம். காபி தோட்டத்தின் நடுவில், 88 அடி பள்ளத்தில் இருந்து, இரும்பு பில்லர் அமைத்து, அதன் மீது 33 எம்.எம்., தடிமனான கண்ணாடி பயன்படுத்தி பாலம் கட்டப்பட்டது. 33 மீட்டர் நீளமான பாலத்தின் ஓரத்தில் நின்று, இயற்கை அழகை கண்டு மகிழலாம்.
கண்ணாடி பாலத்தின் மீது, ஒரே நேரத்தில் 40 பேர் நின்று, இயற்கையை பார்க்க முடியும் என்றாலும், தற்போதைக்கு ஆறு பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
இதன் மீது நடமாட, ஒருவருக்கு தலா 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கண்ணாடி பாலத்தின் மீது நடந்து, புதிய அனுபவத்தை பெறும் நோக்கில் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
குஷால் நகரில் இருந்து, தலக்காவிரிக்கு சுற்றுலா செல்வோர், வழியில் தென்படும் பல சுற்றுலா இடங்களை பார்க்கின்றனர். தற்போது இவர்களின் சுற்றுலா பட்டியலில், உடோத் மொட்டேவில் உள்ள கண்ணாடி பாலமும் சேர்ந்துள்ளது.- நமது நிருபர் -