ரஞ்சி தொடர் டில்லி அணி கேப்டன் பதவி; 'நோ' சொன்ன கோஹ்லி!
ரஞ்சி தொடர் டில்லி அணி கேப்டன் பதவி; 'நோ' சொன்ன கோஹ்லி!
ADDED : ஜன 28, 2025 02:09 PM

புதுடில்லி; ரஞ்சி தொடருக்கான டில்லி அணி கேப்டன் பதவியை விராட் கோஹ்லி ஏற்க மறுத்துவிட்டார்.
இந்திய கிரிக்கெட் அணி கலந்து கொண்ட அண்மைக்கால போட்டிகள் பெரிய வெற்றியை தரவில்லை. குறிப்பாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் கிடைத்த தோல்வி இந்திய அணிக்கும், பி.சி.சி.ஐ.,க்கும் கடும் நெருக்கடியை தந்திருக்கிறது.
தொடர் தோல்வி, மோசமான ஆட்டத்திறன் காரணமாக அணியின் வீரர்கள் அனைவரும் இனி ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. அதன் காரணமாக அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பந்த், சுப்மன்கில் உள்ளிட்டோர் ரஞ்சி தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
அந்த வரிசையில் கோஹ்லி, டில்லி அணியில் விளையாடுகிறார். 12 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் ரஞ்சி தொடரில் களம் இறங்க உள்ளார். இந் நிலையில் இந்த தொடரின் டில்லி அணியின் கேப்டன் பதவியை கோஹ்லி ஏற்க வேண்டும் என்று அணியின் நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் சுதந்திரமான விளையாட்டை விளையாட விரும்புவதால் கேப்டன் பதவியை கோஹ்லி ஏற்க மறுத்து விட்டார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. ஆகையால் அணியின் கேப்டனாக ஆயுஷ் படோனி அறிவிக்கப்பட்டு உள்ளார். ஜன.30ம் தேதி ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் டில்லி அணி விளையாடுகிறது. இந்த போட்டியின் கேப்டனாக ஆயுஷ் படோனி செயல்படுவார்.

