பாடத்துடன் சத்தான உணவு பெற்றோரை கவரும் கோணனுார் மாணவர் விடுதி
பாடத்துடன் சத்தான உணவு பெற்றோரை கவரும் கோணனுார் மாணவர் விடுதி
ADDED : மார் 02, 2024 10:17 PM

அரசு மாணவர் விடுதி என்றால் சங்கடப்படுவோர் மத்தியில், பசுமையான சூழ்நிலையை ஏற்படுத்தி, தங்கள் பிள்ளைகளை, ஹாசனின் கோணனுார் மாணவர் விடுதியில் சேர்க்க பெற்றோர் ஆர்வமுடன் உள்ளனர்.
ஹாசன் மாவட்டம், கோணனுாரின் கோட்டே தெருவில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான விடுதி உள்ளது. அது விடுதியா அல்லது பசுமையான தோட்டமா என்ற அளவுக்கு, பசுமையாக காட்சி அளிக்கிறது.
ஆண்டுதோறும் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 45 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் கல்வி, துாய்மை, ஒழுக்கம் மட்டுமின்றி விடுதியின் வெளிப்புற சூழலை கையாளுவதிலும் சிறந்து விளங்குகிறது.
தங்கும் விடுதிகளின் முன்புறம், பின்புறம் உள்ள இடம் வீணாகாமல் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த இடம் முழுதும் வெந்தயம், பெருஞ்சீரகம், கீரை, முள்ளங்கி, பீட்ரூட், கத்திரிக்காய் என பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன.
ஆண்டு முழுதும் விடுதி மாணவர்களுக்காக இங்கிருந்தே கீரைகள், காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
சமூக நலத்துறையின் உணவு விதிகளை தவறாமல் கடைபிடிப்பதுடன், விடுதியின் மூன்று சமையல் அறை ஊழியர்களின் முயற்சியாலும், மேற்பார்வையாளர்களின் ஆர்வத்தாலும், தினமும் கீரைகள், காய்கறிகள், சத்தான உணவுகளை மாணவர்கள் சாப்பிடுகின்றனர்.
வளாகத்தில் ஆறு தென்னை மரம், 30க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் உள்ளன. அனைத்தும் இயற்கை முறையில் பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அவையே மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
தங்கும் அறையின் தாழ்வாரத்திலும் பல்வேறு அலங்கார செடிகள், தொட்டிகளில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.
கடந்த 2023 - 24ம் ஆண்டுக்கான 'சுற்றுச்சூழல் நட்பு விடுதி'யாக, இந்த விடுதிக்கு குடியரசு தின விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3_Article_0003, 3_Article_0004,
விடுதி வளாகத்தில் வளர்க்கப்படும் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிச் செடிகள். (அடுத்த படம்) விடுதி வளாகத்தில் விளைந்த வாழைப்பழம். இடம்: ஹாசன்.
படங்கள்: அஜித் குமார், நுாதன்.
இங்குள்ள மாணவர்கள் நம் குழந்தைகள் போன்றவர்கள். ஆரோக்கியமான உணவுடன் சத்தான பச்சை காய்கறிகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன. மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் எங்களுக்கும் பெருமை தான்.
அஜித்குமார்,
மூத்த மேற்பார்வையாளர்
தங்கும் விடுதியில் சுவையான உணவுடன் சேர்ந்து கற்கும் நல்ல சூழலை உருவாக்கி உள்ளனர். இங்கு விளையும் பச்சை காய்கறிகள், வாழைப்பழம், தென்னை ஆகியவை விடுதி சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
நுாதன்,
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்
- நமது நிருபர் -

