தமிழகம் வேண்டாம்; தொழில் தொடங்க ஆந்திரா தான் சரியான இடம்; ஜகா வாங்கியது தென்கொரிய நிறுவனம்
தமிழகம் வேண்டாம்; தொழில் தொடங்க ஆந்திரா தான் சரியான இடம்; ஜகா வாங்கியது தென்கொரிய நிறுவனம்
UPDATED : நவ 15, 2025 01:07 PM
ADDED : நவ 15, 2025 12:58 PM

சென்னை: தென்கொரியாவை சேர்ந்த பிரபல காலணி நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இருந்தது. தற்போது வாபஸ் பெற்று கொண்டு ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தென்கொரியாவை
சேர்ந்த வாசவுங் பன்னாட்டு நிறுவனம் காலணிகளை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிறுவனம் அடிடாஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு சப்ளையராக இருந்து
வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், இந்த நிறுவனம் தமிழகத்தில் காலணிகளை
உற்பத்தி செய்ய தொழிற்சாலை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
போட்டு இருந்தது. ரூ.1720 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தால் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என
அந்நிறுனம் அறிவித்து இருந்தது.
இது தொடர்பாக தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது
இந்த நிறுவனம் தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வாபஸ் பெற்று கொண்டது.
ஆந்திரா மாநிலம் குப்பத்தில் தொழிற்சாலை அமைக்க, ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சட்டசபை
தொகுதியான குப்பத்தில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
இது
குறித்து அந்த நிறுவனம் கூறியதாவது: இந்த ஆலையில் ஆண்டுக்கு 2 கோடி ஜோடி விளையாட்டு காலணிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். குப்பத்தில்
உள்ள இரண்டு கிராமங்களில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக
தமிழகம் மற்றும் ஆந்திர அரசுடன் பேச்சு நடத்தி வந்தோம்.
தற்போது
நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஆந்திராவில் அமைக்க முடிவு செய்து இருக்கிறோம்.
முதலீடு செய்வதற்காக, நாங்கள் பல்வேறு நாடுகளை மதிப்பீடு செய்தோம். இந்தியா
மிகவும் உறுதியளிக்கிறது. ஏனென்றால் அது ஒரு பெரிய இளம் மக்கள்தொகையையும்
நல்ல கல்வி முறையையும் கொண்டுள்ளது. பயிற்சி பெற்ற பொறியாளர்கள் எங்கள்
வணிகத்திற்கு முக்கியம். இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில்
இந்த நிறுவனம் செய்யும் முதல் முதலீடாக இது இருக்கும். தென் கொரியா,
தைவான், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சீனாவில் மட்டும் இந்த நிறுவனம்
இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

