ADDED : டிச 20, 2024 05:27 AM
பெலகாவி,: ''கிருஷ்ணா மேலணை திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்ததால், இருப்புள்ள நிதியின் அடிப்படையில் கட்டம் கட்டமாக பணிகள் முடிக்கப்படும்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் பூஜாரின் கேள்விக்கு பதிலளித்து, துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
கிருஷ்ணா மேலணை திட்டத்தின் கட்டம் 1, 2 பணிகள் முடிவடைந்துள்ளன. 51,148.94 கோடி ரூபாய் செலவில், கட்டம் - 3ன் பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. இதுவரை 18,307.33 கோடி ரூபாய் செலவானது. கிருஷ்ணா மேலணை திட்டத்தால் மூழ்கிய 1,75,470 ஏக்கர் பகுதியின், 78,854 கட்டடங்களுக்கு ஏற்கனவே நிவாரணம் வழங்கப்பட்டது.
மூன்றாம் கட்டத்தில் மூழ்கவுள்ள 75,563 ஏக்கர் நிலத்தின், 25,660 கட்டடங்களுக்கு 17,627 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க, அரசு அனுமதி அளித்தது. இதுவரை 1,734.53 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது; மற்றவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.
நிதி இருப்பை கவனித்து, அரசின் அனுமதி பெற்று கிருஷ்ணா மேலணை திட்டம் படிப்படியாக முடிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.