ADDED : மார் 08, 2024 01:57 AM

கர்நாடகாவில் ஏராளமான பழங்கால கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் மன்னர்கள் காலத்தின் கலை நயம், கட்டட கலைகளை இந்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்து உள்ளன.
இதுபோல கொப்பால் குகனுாரில் உள்ள நவலிங்க கோவிலும், கட்டட கலைக்கு சிறந்த சான்றாக உள்ளது. இந்த கோவில், ஒன்பதாம் நுாற்றாண்டில் ராஷ்டிரகூட வம்ச மன்னர் அமோகவர்ஷா காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலில் வளாகத்தில் கங்கா, சரஸ்வதி, காளிகாதேவி, மகமாயி, சாமுண்டி உட்பட ஒன்பது கோவில்கள் உள்ளன.
அனைத்து கோவில்களிலும் தலா ஒரு லிங்கம் இருப்பதால், நவலிங்க கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள கோபுரத்தின் மீது, விஷ்ணுவின் மனைவி கஜலட்சுமி உருவமும் உள்ளது.
இதுதவிர கோவில் வளாகத்திற்குள் கி.பி., 1,186ம் ஆண்டை சேர்ந்த, கன்னட எழுத்துகள் பொறிக்கப்பட்ட, இரண்டு கல்வெட்டுகளும் உள்ளன. இதையும் பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
கோவிலின் கட்டட கலையை கண்டு ரசிக்கவே, தினமும் பெரும்பாலான பக்தர்கள் வருவதாக, அர்ச்சர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். பெங்களூரில் இருந்து குகனுார், 380 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. அரசு, ஆம்னி பஸ் வசதி உள்ளது.
ரயிலில் சென்றால் கொப்பால் சென்று அங்கிருந்து, லோக்கல் பஸ்சில் குகனுார் சென்றடையலாம். குகனுாரை சுற்றி ஏராளமான சுற்றுலா தலங்களும் இருப்பதால், அங்கு சென்றால் கோவில், சுற்றுலா என இரண்டு இடங்களுக்கும் சென்று வரலாம
- நமது நிருபர் -

