ADDED : பிப் 15, 2024 04:34 AM

ஷிவமொகா : லோக்சபா தேர்தலில், ஷிவமொகா தொகுதியில் கீதா சிவராஜ்குமார், காங்கிரஸ் வேட்பாளராக வாய்ப்புள்ளது. ஒருவேளை இவர் சம்மதிக்கா விட்டால், பா.ஜ.,வில் உள்ள குமார் பங்காரப்பாவை இழுத்து, வேட்பாளராக்க முயற்சி நடக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும், கர்நாடக காங்கிரஸ், 20 தொகுதிகளை குறி வைத்து செயல்படுகிறது. ஆனால் பல தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை பூத கண்ணாடி வைத்து தேடும் சூழ்நிலை உள்ளது. போட்டியிட ஆர்வம் உள்ளவர்களுக்கு, வெற்றி பெறும் திறன் இல்லை. வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு, போட்டியிட ஆர்வம் இல்லை.
ஒவ்வொரு தொகுதிக்கும், வேட்பாளரை தேடுவதே காங்., மேலிடத்துக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
வேட்பாளர் யார் என, தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். பிரசாரம் செய்யவும் தயங்குகின்றனர். வேட்பாளர் இல்லாத தொகுதிகளில், ஷிவமொகாவும் ஒன்றாகும்.
ஷிவமொகாவில் நடிகர் சிவராஜ்குமாரை போட்டியிடும்படி, துணை முதல்வர் சிவகுமார் நேரடியாகவே கூறினார். ஆனால், சிவராஜ்குமார் சம்மதிக்கவில்லை. இவரது மனைவி கீதாவுக்கு சீட் கொடுக்க ஆலோசிக்கப்படுகிறது. அல்லது கல்வித்துறை அமைச்சரான மதுபங்காரப்பா போட்டியிட்டாலும் ஆச்சர்யப்பட முடியாது.
இதற்கிடையில், பா.ஜ.,வில் உள்ள குமார் பங்காரப்பாவை காங்கிரசுக்கு அழைத்து வந்து, ஷிவமொகாவில் களமிறக்கவும் முயற்சி நடக்கிறது.
குமார் பங்காரப்பா, காங்கிரசுக்கு வந்தால், அவரை ஷிவமொகாவிலும், அவரது சகோதரி கீதா சிவராஜ்குமாரை, உத்தரகன்னடாவிலும் களமிறக்க ஆலோசனை நடக்கிறது.
இதன் மூலம் இவர்களின் குடும்ப மனஸ்தாபத்தை சரி செய்ய, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இதற்காகவே மது பங்காரப்பாவுக்கு தட்சிண கன்னடா தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவரும் தன் சகோதரர் குமார் பங்காரப்பாவை, காங்கிரசுக்கு அழைத்து வர திட்டம் வகுக்கிறார். இதற்கு முன் குமார் பங்காரப்பா, காங்கிரசுக்கு வர ஆர்வம் காண்பித்தார். முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசினார்.
இந்த போட்டோவும் சமூக வலைதளத்தில் பரவியது. ஆனால் இவர் காங்கிரசில் இணைய, மது பங்காரப்பா தடைக்கல்லாக இருந்ததாக கூறப்பட்டது.
தற்போது இவர், கட்சி மேலிடத்தின் உத்தரவு படி, குமார் பங்காரப்பாவை, காங்கிரசுக்கு அழைத்து வர முயற்சிக்கிறார்.

