ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வலை முதல்வர் மீது குமாரசாமி குற்றச்சாட்டு
ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வலை முதல்வர் மீது குமாரசாமி குற்றச்சாட்டு
ADDED : ஜன 08, 2024 07:03 AM

பெங்களூரு; ''ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களை காங்கிரஸ்க்கு இழுக்க, முதல்வர் சித்தராமையா முயற்சி செய்கிறார்,'' என்று, குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
மத்திய விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள வீட்டில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவை நேற்று சந்தித்து பேசினார்.
இதுகுறித்து குமாரசாமி அளித்த பேட்டி:
எங்கள் வீட்டிற்கு வந்த, மத்திய விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டாவிடம், கர்நாடக தென்னை விவசாயிகளிடம் இருந்து, தேங்காய்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று, தேவகவுடா கோரிக்கை வைத்து உள்ளார்.
நாங்கள் எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள். மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு, விவசாயிகள் பற்றி எந்த கவலையும் இல்லை.
முதல்வர் பேரம்
ம.ஜ.த., கட்சியை முடிக்க வேண்டும் என்று, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தீவிரமாக வேலை செய்கின்றனர்.
அவர்களின் நிகழ்ச்சி நிரலில் ம.ஜ.த.,வை ஒழிக்க வேண்டும் என்பதும் உள்ளது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை காங்கிரசுக்கு இழுக்க, முதல்வர் சித்தராமையா முயற்சி செய்கிறார்.
ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு முதல்வரோ, துணை முதல்வரோ சென்றால், எங்கள் கட்சிக்கு வாருங்கள். உங்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருகிறோம் என்று, பேரம் பேசுகின்றனர்.
சித்தராமையா இந்த நிலைக்கு உயர, தேவகவுடாவே காரணம். ஆனால், அவருக்கு நன்றியுணர்வு இல்லை. தேவகவுடா எதிரிகளுக்கு கூட சாபம் விடாதவர். ம.ஜ.த., - பா.ஜ., இனி இணைந்து செயல்படும். இது மட்டுமே எங்கள் குறிக்கோள்.
சுமலதா பா.ஜ., ஆதரவில் நீடித்தால், கூட்டணி கட்சி என்ற முறையில், தேவைப்பட்டால் அவரை சந்திப்பேன். தொகுதி பங்கீடு குறித்த பேச்சு, ஆரம்ப கட்டத்தில் உள்ளது. லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.