மத்திய அரசுடன் மோதக்கூடாது காங்கிரசுக்கு குமாரசாமி அறிவுரை
மத்திய அரசுடன் மோதக்கூடாது காங்கிரசுக்கு குமாரசாமி அறிவுரை
ADDED : பிப் 11, 2025 06:33 AM

ஹாவேரி: ''மத்திய அரசு, மாநில அரசுகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, சில நெறிமுறைகள் உள்ளன. அதன்படியே பிரதமர் நரேந்திர மோடி அரசு நடந்து கொள்கிறது,'' என மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
ஹாவேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக மாநில பிரச்னைகளுக்கு, தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், மத்திய அரசுடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும். மாநிலத்தில் சிலர், தினமும் மத்திய அரசை விமர்சிக்கின்றனர். இதனால் எதையும் சாதிக்க முடியாது. கூட்டமைப்பு நடைமுறையில் நாம் இருக்கிறோம். முந்தைய அரசுகள் மத்திய அரசுடன், எப்படி நடந்து கொண்டனவோ, அதுபோன்று இன்றைய அரசும் நடந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசு, மாநில அரசுகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, சில நெறிமுறைகள் உள்ளன. அதன்படியே பிரதமர் நரேந்திர மோடி அரசு நடந்து கொள்கிறது. இதை தவிர மாநிலத்துடன் புதுவிதமாக நடந்து கொள்ளவில்லை. விதிமுறைகளை அறியாமல், பிரதமர் மோடி மீது குறை கூறினால், தேவையின்றி மோதலுக்கு வழி வகுக்கும்.
உண்மையான பிரச்னை எங்குள்ளது என்பதை புரிந்து, நடந்து கொள்ள வேண்டும். கர்நாடகா எந்த அளவுக்கு வளர்ச்சி அடைய வேண்டுமோ, அதை அடையவில்லை. அரசியல் சாசனத்தை முழுமையாக மாற்ற முற்பட்டுள்ளதாக அவப்பிரசாரம் செய்கின்றனர்.
அரசியல் சாசனத்தை மாற்ற யாராலும் முடியாது என்பது முன்பே உறுதியாகி விட்டது. தனிப்பட்ட சுய நலத்துக்காக சமுதாயத்தை திசை திருப்ப, சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களை எச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

