sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாதயாத்திரையில் பங்கேற்க பா.ஜ.,வுக்கு குமாரசாமி நிபந்தனை!: பிரீத்தம் கவுடாவை ஒதுக்கி வைக்கும்படி நெருக்கடி

/

பாதயாத்திரையில் பங்கேற்க பா.ஜ.,வுக்கு குமாரசாமி நிபந்தனை!: பிரீத்தம் கவுடாவை ஒதுக்கி வைக்கும்படி நெருக்கடி

பாதயாத்திரையில் பங்கேற்க பா.ஜ.,வுக்கு குமாரசாமி நிபந்தனை!: பிரீத்தம் கவுடாவை ஒதுக்கி வைக்கும்படி நெருக்கடி

பாதயாத்திரையில் பங்கேற்க பா.ஜ.,வுக்கு குமாரசாமி நிபந்தனை!: பிரீத்தம் கவுடாவை ஒதுக்கி வைக்கும்படி நெருக்கடி


ADDED : ஆக 01, 2024 11:06 PM

Google News

ADDED : ஆக 01, 2024 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'மூடா' முறைகேட்டில், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரில் இருந்து மைசூரு வரை பா.ஜ., நடத்தும் பாதயாத்திரையில் பங்கேற்க, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி சம்மதித்துள்ளார். ஆனால், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடாவை ஒதுக்கி வைக்க வேண்டும் என, பா.ஜ.,விடம் நிபந்தனை விதித்துள்ளார். இது, பா.ஜ.,வை நெருக்கடியில் தள்ளியுள்ளது.

கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையம் மற்றும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடுகள், சில மாதங்களாக, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு தொடர்பாக, நாகேந்திரா அமைச்சர் பதவியை இழந்தார். அதேபோன்று, 'மூடா'வில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, விதிமீறலாக 14 வீட்டுமனைகள் வழங்கியதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வால்மீகி ஆணைய ஊழலை விட, மூடா விஷயத்துக்கு எதிர்க்கட்சியான பா.ஜ., அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த முறைகேட்டில் சிக்கிய முதல்வர் சித்தராமையாவை, ராஜினாமா வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதே, பா.ஜ.,வின் திட்டமாகும். ஏற்கனவே மைசூரில் போராட்டம் நடத்திய பா.ஜ., நாளை பாதயாத்திரை துவங்க தயாராகி வருகிறது. பாதயாத்திரைக்கு கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வும் பங்கேற்கும் என, எதிர்பார்த்தது.

ஆனால், மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு, பா.ஜ.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா, பாதயாத்திரையில் முக்கிய பங்கு வகிப்பதில் விருப்பம் இல்லை. 'எங்கள் குடும்பத்தினருக்கு, விஷம் கொடுத்தவர்களுடன் நாங்கள் ஒரே மேடையில் தோன்ற வேண்டுமா. தேவகவுடா குடும்பத்தினரை அழிக்க முயற்சித்த பிரீத்தம் கவுடா அருகில் அமர, என்னை கூட்டத்துக்கு அழைக்கிறீர்களா. பிரஜ்வல் ரேவண்ணா பென் டிரைவை பரப்பியது யார் என தெரியாதா. கூட்டணி வேறு, அரசியல் வேறு. பா.ஜ.,வின் பாதயாத்திரையில் ம.ஜ.த., பங்கேற்காது' என, நேற்று முன்தினம் டில்லியில் அதிரடியாக அறிவித்தார்.

அது மட்டுமின்றி, ம.ஜ.த.,வின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும், இது குறித்து முடிவு செய்யப்பட்டது. ஹாசனில் பிரீத்தம் கவுடா மற்றும் ம.ஜ.த., இடையே, பல ஆண்டுகளாக அரசியல் யுத்தம் நடக்கிறது. 2018ல் ஹாசன் தொகுதியில், பிரீத்தம் கவுடா வெற்றி பெற்று முதன் முறையாக பா.ஜ., கொடியை பறக்க விட்டார். 2023 சட்டசபை தேர்தலில் இவருக்கு சீட் கொடுத்தும், அவரால் வெற்றி பெற முடியவில்லை.

ஆயினும், மாவட்டத்தில் இவருக்கும், ரேவண்ணா குடும்பத்தினரை போன்று, தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. பிரீத்தம் கவுடா மீது, குமாரசாமியின் கோபத்துக்கு காரணம் பென் டிரைவ். லோக்சபா தேர்தலின் போது, பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ அடங்கிய பென் டிரைவ் வெளியாகி, பெரும் சூறாவளியை ஏற்படுத்தியது. கைது பயத்தில் பிரஜ்வல் வாரக்கணக்கில் வெளிநாட்டில் இருந்தார். அதன்பின் பெங்களூருக்கு திரும்பி, போலீசாரிடம் சரண் அடைந்தார்.

இதற்கிடையே சாட்சிகளை கலைக்கும் நோக்கில், பணிப்பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் ரேவண்ணா கைதாகி சில நாட்கள் சிறையில் இருந்தார். அதன்பின் ஜாமின் பெற்று விடுதலையானார். அவரது மனைவி பவானி, கைது பயத்தால் தலைமறைவாக இருந்து, முன்ஜாமின் பெற்று கொண்ட பின், போலீசாரிடம் சரண் அடைந்தார்.

இந்த சம்பவத்தால், தேவகவுடா குடும்பத்தினர் மிகவும் வருத்தமடைந்தனர். இத்தனைக்கும் பென் டிரைவ் வெளியானதே காரணம் என, மத்திய அமைச்சர் குமாரசாமி கோபத்தில் இருக்கிறார். பென் டிரைவை வெளியிட்டது பிரீத்தம் கவுடா என, ம.ஜ.த.,வினர் குமுறுகின்றனர். இதே காரணத்தால் பா.ஜ.,வின் பாதயாத்திரையில் பங்கேற்க முடியாது என, குமாரசாமி பிடிவாதம் பிடித்தார்.

பாதயாத்திரை விஷயத்தில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் நோக்கில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நட்டா உட்பட முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர் குமாரசாமியுடன் ஆலோசனை நடத்தி சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர், 'பிரீத்தம் கவுடாவை ஒதுக்கி வைத்தால், பாதயாத்திரையில் ம.ஜ.த., பங்கேற்கும்' என, நிபந்தனை விதித்துள்ளார்.

இதற்கிடையே, பிரஹலாத் ஜோஷி, மாநில பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆகியோர், நேற்று மாலை டில்லியில், குமாரசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். நாளை பெங்களூரில் இருந்து, மைசூருக்கு பாதயாத்திரையை துவங்க முடிவானது. இதில் குமாரசாமியும் பங்கேற்க சம்மதித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

பாதயாத்திரையில் பிரீத்தம் கவுடா பங்கேற்பாரா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. குமாரசாமியின் நெருக்கடிக்கு பணிந்து, பிரீத்தம் கவுடாயை ஒதுக்கி வைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. அதே நேரத்தில் செல்வாக்கு மிக்க இவரை ஒதுக்கினால், தேன் கூட்டில் கைவிட்டதை போன்றிருக்கும் என, பா.ஜ., தொண்டர்கள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

டில்லியில் விஜயேந்திரா அளித்த பேட்டி:

ஆகஸ்ட் 3 காலை 8:30 மணிக்கு பெங்களூரில் இருந்து, மைசூருக்கு பாதயாத்திரையை துவக்குவோம். மத்திய அமைச்சர் குமாரசாமியே, பாதயாத்திரையை துவக்கி வைப்பார். சிறு, சிறு குழப்பங்களை சரி செய்து கொண்டோம். நிர்ணயித்தபடி பாதயாத்திரை நடத்துவோம்.

மூடாவில் முறைகேடு நடந்துள்ளது என்பதை, சட்டசபையில் முதல்வரே ஒப்புக்கொண்டார். சட்டவிரோதமாக 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மனைகளை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

பட விளக்கம்: டில்லியில் குமாரசாமியை சந்தித்து பேசிய பாஜ., தலைவர்கள்.

....புல் அவுட்....

பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் சேர்ந்து, பெங்களூரில் இருந்து மைசூருக்கு பாதயாத்திரை துவக்குவோம். கர்நாடக காங்கிரஸ் அரசு, ஏழைகளை கொள்ளை அடிக்கிறது. இதனால் லோக்சபா தேர்தலில் இக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அரசு ஊழலில் மூழ்கியுள்ளது.

- ராதா மோகன் தாஸ், பா.ஜ., பொறுப்பாளர்






      Dinamalar
      Follow us